கலீல் அகமது, காயம் காரணமாக 2026 ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.  
விளையாட்டு

"சோதனை மேல் சோதனை போதுமடா சாமி".. வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் மற்றொரு சம்பவம் - நல்ல ஃபார்முக்கு வந்த சிஎஸ்கே அணிக்கு பலத்த அடி!

இந்த சீசனில் கலீல் அகமது மீண்டும் விளையாட வாய்ப்பில்லை என்று ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மாலை முரசு செய்தி குழு

ஐபிஎல் 2026 தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தற்போது ஒரு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமது, காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து முழுமையாக விலகியுள்ளார். சிஎஸ்கே அணி இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளிலும் கலீல் அகமது இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல் 14-ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியின் போது, அவருக்கு வலது இடுப்புப் பகுதியில் கடும் வலி ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்குத் தசை நார் கிழிவு (grade 2 tear) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தக் காயம் குணமாகக் குறைந்தது 10 முதல் 12 வாரங்கள் வரை ஆகும் என்பதால், இந்த சீசனில் அவர் மீண்டும் விளையாட வாய்ப்பில்லை என்று ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 4.8 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட கலீல் அகமது, ஆரம்பக் கட்டப் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காகத் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி வந்தார். இந்திய அணிக்காக 11 ஒருநாள் மற்றும் 18 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், கடைசியாக 2024 ஜூலை மாதம் சர்வதேசப் போட்டியில் பங்கேற்றார். முக்கியமான நேரத்தில் கலீல் அகமது விலகியிருப்பது சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பலத்தை சற்று பலவீனப்படுத்தியுள்ளது.

மற்றொரு பக்கம், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிறகு பேசிய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், அணி இப்போதுதான் மெதுவாக ஒரு சரியான வடிவத்திற்கு வந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, கொல்கத்தாவையும் வீழ்த்தியதன் மூலம் சிஎஸ்கே புள்ளிப் பட்டியலில் எட்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஒவ்வொரு வீரரும் தங்களின் பொறுப்பு என்ன என்பதையும், எந்த மாதிரியான லெந்தில் பந்து வீச வேண்டும் என்பதையும் புரிந்து செயல்படுவது அணிக்கு ஒரு நல்ல அறிகுறி என்று ருதுராஜ் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 220 ரன்கள் வரை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இறுதியில் 192 ரன்கள் மட்டுமே எடுத்தது. இது குறித்துப் பேசிய ருதுராஜ், முதல் ஏழு அல்லது எட்டு ஓவர்களுக்குப் பிறகு ஆடுகளத்தின் தன்மை முற்றிலும் மாறிவிட்டதாகக் கூறினார். பந்து சற்று மெதுவாக வரத் தொடங்கியதோடு, சுழற்பந்து வீச்சுக்கும் ஒத்துழைக்க ஆரம்பித்தது. அதனால் 180 முதல் 190 ரன்களே போதுமான ஸ்கோர் என்று தாங்கள் கருதியதாகவும், பந்துவீச்சில் பவர் பிளே ஓவர்களைச் சரியாகப் பயன்படுத்தியதால் வெற்றியைத் தக்கவைக்க முடிந்தது என்றும் அவர் விளக்கினார்.

சிஎஸ்கே அணியின் இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தவர் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது. 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி கொல்கத்தா அணியின் பேட்டிங் வரிசையைச் சரித்தார். போட்டிக்குப் பிறகு பேசிய அவர், மைதானத்தில் அதிகப்படியான பனி மற்றும் ஈரப்பதம் இருந்ததால், விரல்களை உலர்வாக வைத்துக்கொள்வது சவாலாக இருந்ததாகத் தெரிவித்தார். பந்து பேட்டிற்குச் சரியாக வராததைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சரியான இடங்களில் பந்து வீசியது பலன் அளித்ததாக அவர் கூறினார். வரும் போட்டிகளிலும் அணியின் வெற்றிக்காகத் தனது முழுப் பங்களிப்பை வழங்கப் போவதாக அவர் உறுதி அளித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.