இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள வங்கதேச அணியில் இடம்பெற்ற குறிப்பிடத்தக்க இந்து கிரிக்கெட் வீரர் மற்றும் அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்தான் லிட்டன் தாஸ். 31 வயதான இவர், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அணியை வழிநடத்துகிறார்.
இவர் ஒரு பெங்காலி இந்துப் பின்னணியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு காலத்தில் துர்கா பூஜை மற்றும் மஹாலயா வாழ்த்து பதிவிட்டதற்காக சில சமூக வலைதளப் பயனர்களின் வெறுப்பிற்கு ஆளானார். அப்போது அதனை எதிர்கொண்ட வங்கதேச இந்து கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸ், தற்போது தனது மனைவி மற்றும் மகளுடன் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடியுள்ளார்.
வங்கதேச கேப்டனான லிட்டன் தாஸ், தனது மனைவி மற்றும் மகளுடன் விநாயகர் சதுர்த்தியை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார். அவர், தனது வீட்டில் உள்ள விநாயகர் சிலையின் படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். மேலும், "அன்பு, பக்தி மற்றும் நன்றியுணர்வுடன் விநாயகப் பெருமானை எங்கள் இல்லத்திற்கு வரவேற்கிறோம்," என்று தனது சமூக வலைதளப்பக்கத்தில் அவர் எழுதியதோடு, இந்த பண்டிகையின் வழியாக தனது குடும்பத்திற்கு மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு மற்றும் "முடிவற்ற நேர்மறை ஆற்றல்" கிடைக்க வேண்டும் என்றும் பிராத்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லிட்டன் தாஸ், கடந்த ஜூலை மாதம் வங்கதேச ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதற்கு முன்பு வழிநடத்தி வந்த மெஹிடி ஹசன் மிராஸுக்குப் பதிலாகப் தாஸ் தற்போது பொறுப்பேற்றுள்ளார். ஜிம்பாப்வேயிடம் நடந்த ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் வங்கதேச அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து மெஹிடி ஹசன் மிராஸ் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டார். மேலும், தாஸ் பொறுப்பேற்பது முதல் முறையல்ல, இதற்கு முன்பு அவர் ஏழு போட்டிகளில் அணிக்குத் தலைமை தாங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான கேப்டனாக அவரை வாரியம் நியமித்துள்ளது.
அவரது தலைமையின் கீழ், 2022-ல் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வங்கதேச அணி அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. லிட்டன் தாஸ் வங்கதேச அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 சர்வதேசம் என மூன்று வடிவங்களில் விளையாடியுள்ளார். தற்போது இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள இந்த அணியில் குறிப்பிடத்தக்க இந்து கிரிக்கெட் வீரராக இவர் இருப்பது மட்டுமின்றி, விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்