விளையாட்டு

இந்தியா திரும்பிய மீராபாய் சானு... விமானநிலையத்தில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு...

வென்ற வெள்ளிப்பதக்கத்தை இந்திய மக்களுக்கு அர்ப்பணிப்பதாக பளுதூக்கும்  விராங்கனை மீராபாய் சானு தெரிவித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV
டோக்கியோ ஒலிம்பிக்சில் வெள்ளிப் பதக்கம் வென்று நாடு திரும்பிய மீராபாய் சானுவிற்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய பாதுகாப்பு படை சூழ விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த  அவரை பொதுமக்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர். 
இதனைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர்  கிரண் ரிஜிஜூ, சர்பானந்த சோனாவால் உள்ளிட்டோர் கேடயம் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் மீராபாயின் பயிற்சியாளர் விஜய் சர்மாவுக்கும் அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்தனர்.  இதனைத் தொடர்ந்து உரையாற்றிய மீராபாய், தனது பதக்கத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் மீராபாய்க்கு அவர் பணியாற்றி வரும் ரயில்வே துறையின் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். அவருக்கு பதவி உயர்வுடன் 2 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  ஏற்கனவே மணிப்பூர் அரசு சார்பிலும் அவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகையும், காவல் கண்காணிப்பாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 49 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்ற சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை நடத்த ஒலிம்பிக் கமிட்டி திட்டமிட்டுள்ளது. ஒருவேளை அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டால், மீராபாய் தங்கம் வெல்ல வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.