50 நிமிடங்கள் காத்திருந்த நக்வி! கோப்பையை வாங்க மறுத்த இந்திய அணி... என்ன நடந்தது? 
விளையாட்டு

50 நிமிடங்கள் காத்திருந்த நக்வி! கோப்பையை வாங்க மறுத்த இந்திய அணி... என்ன நடந்தது?

நக்வி, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா மற்றும் செயலாளர் தேவஜித் சைகியா ஆகியோருக்குப் பின்னால் அமர்ந்திருந்தார். போட்டி முடிந்ததும், அவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார்.

மாலை முரசு செய்தி குழு

மகளிர் ஆசியக் கோப்பை 2026 தொடரின் இறுதிப்போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இதில் இலங்கை அணியை எதிர்கொண்ட ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, 72 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்றது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தலைவரும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்க இந்திய அணி மறுத்துவிட்டது.

போட்டியின்போது அதிகம் தென்படாத நக்வி, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா மற்றும் செயலாளர் தேவஜித் சைகியா ஆகியோருக்குப் பின்னால் அமர்ந்திருந்தார். போட்டி முடிந்ததும், அவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார்.

போட்டி முடிந்ததும், பிசிசிஐ அதிகாரிகள் மகளிர் அணி வீரர்களிடம் நீண்ட நேரம் உரையாடியுள்ளனர். தேவஜித் சைகியா, நந்தினி சர்மாவுக்குப் பதக்கத்தை வழங்கியுள்ளார்.

மேடையில் நக்வி காத்திருக்க, கோப்பை வழங்கும் Presentation Ceremony நடைபெறுமா என்பது தெரியாத நிலை நீடித்தது. சுமார் 50 நிமிடங்களுக்குப் பிறகு, இந்திய அணி பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து கோப்பையைப் பெற்றுக்கொள்ளாது என்பது உறுதியானது.

இலங்கை வீரர்கள் இரண்டாம் இடத்துக்கான பதக்கங்களையும், போட்டியை நடத்திய அதிகாரிகள் தங்களுக்கான நினைவுச் சின்னங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்திய அணி உடை மாற்றும் அறைக்குச் சென்றது. போட்டிக்குப் பிறகான நேர்காணலிலும் இந்திய வீரர்கள் கலந்துகொள்ளவில்லை.

இது முதன்முறை அல்ல

மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெற மறுப்பது இது முதன்முறை அல்ல.

கடந்த ஆண்டு பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடந்த சில மாதங்களில் ஆசியக் கோப்பை தொடர் நடைபெற்றது. சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஆசிய கோப்பையை வென்றதும் நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெற்றுக்கொள்ள மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்தப் போட்டியில்தான் இந்திய அணி வீரர்கள் எதிரணியினருடன் கைகுலுக்க மறுத்தனர். கிரிக்கெட் வரலாற்றில் அதுவே முதன்முறை.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.