பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான அப்ராப் அகமது தற்போது களத்தில் மட்டுமல்லாமல், களத்திற்கு வெளியேயும் தலைப்புச் செய்தியாகியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன், அவர் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ஒருவருக்கு குத்துச்சண்டை சவால் விடுத்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
சமீபத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளரான சாரா பலோச் (Sara Baloch) நடத்திய நேர்காணல் ஒன்றில் அப்ராப் அகமது பங்கேற்றார். ஜூன் 2025-ல் நடந்த இந்த நேர்காணலின் ஒரு பகுதி தற்போது வைரலாகி வருகிறது. அவரிடம் சாரா, "உலகில் உள்ள கிரிக்கெட் வீரர்களில் யாரை நீங்கள் சண்டையில் எதிர்த்துப் போட்டியிட விரும்புகிறீர்கள்? யார் மீது உங்களுக்கு அதிக கோபம் அல்லது ஆத்திரம் வரும்?" என்று கேட்டுள்ளார்.
இந்தக் கேள்விக்கு 27 வயதான அப்ராப் அகமது சற்றும் யோசிக்காமல் புன்னகையுடன் அளித்த பதில், கிரிக்கெட் ரசிகர்களிடையே விவாதத்தை உருவாக்கியுள்ளது. அவர் சவால் விடுத்த இந்திய கிரிக்கெட் வீரர், முன்னாள் துவக்க வீரர் ஷிகர் தவான் (Shikhar Dhawan) ஆவார்.
அவர் உருது மொழியில், "நான் குத்துச்சண்டை செய்ய விரும்புகிறேன், என் முன்னால் ஷிகர் தவான் நிற்க வேண்டும் என்று விரும்புகிறேன்" (Main chahta hu ki main boxing karu aur khada Shikhar Dhawan ho saamne) என்று கூறினார். எனினும், அப்ராப், ஷிகர் தவானை எதிர்த்து சண்டையிட ஏன் விரும்புகிறார் என்பதற்கான எந்த ஒரு குறிப்பிட்ட காரணத்தையும் அந்த நேர்காணலில் அவர் தெரிவிக்கவில்லை. எனினும், இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு இடையே நிலவும் உரசலை இது மீண்டும் கிளறிவிட்டுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
அப்ராப், ஆசியக் கோப்பையின் போது சஞ்சு சாம்சனின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு, இந்திய வீரர்கள் இருந்த இடத்தைப் பார்த்து தன் வழக்கமான பாணியில் ஒரு வித்தியாசமான கொண்டாட்டத்தைச் செய்திருந்தார். இந்தியா வெற்றி பெற்ற பிறகு, இந்திய வீரர்கள் அர்ஷ்தீப் சிங், ஜிதேஷ் சர்மா போன்றோர் அப்ராப்பின் அதே பாணியை கேலி செய்யும் வகையில் பிரதிபலித்துக் கொண்டாடியதும் வைரலாகியது.
இந்த சவாலுக்கு மத்தியில், அப்ராப் அகமது தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளார். கடந்த வாரம் கராச்சியில் நடைபெற்ற ஒரு தனியார் விழாவில் அவருக்குத் திருமணம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, அக்டோபர் 6-ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, பாக்., டெஸ்ட் அணித் தலைவர் ஷான் மசூத், நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி உட்பட பல முக்கிய வீரர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.