விளையாட்டு

பஞ்சாப் கிங்ஸ் கேப்டனின் விஸ்வரூபம்! தன்னைத் திருத்திக் கொள்ள ஸ்ரேயாஸ் ஐயருக்குக் கிடைத்த அந்த "ஒற்றை நம்பிக்கை வார்த்தை" எது?

தன்னை நோக்கி வீசப்பட்ட கிண்டல் சொற்களே, தன்னைத் திருத்திக் கொண்டு இன்று இந்த நிலைக்கு வரக் காரணமாக

மாலை முரசு செய்தி குழு

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் ஒரு தவிர்க்க முடியாத வீரராக வலம் வரும் ஸ்ரேயாஸ் ஐயர், தற்போது டி20 கிரிக்கெட்டிலும் தனது அதிரடியால் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகத் தனது பயணத்தைத் தொடங்கி, இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும், ஒரு சிறந்த ஃபினிஷராகவும் உருவெடுத்துள்ள அவரது இந்த மாற்றத்திற்குப் பின்னால் ஒரு பெரிய போராட்டமே ஒளிந்திருக்கிறது. தன்னை நோக்கி வீசப்பட்ட கிண்டல் சொற்களே, தன்னைத் திருத்திக் கொண்டு இன்று இந்த நிலைக்கு வரக் காரணமாக இருந்ததாக ஸ்ரேயாஸ் ஐயர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் 'ஷார்ட் பால்' வீசினால் ஸ்ரேயாஸ் அவுட் ஆகிவிடுவார் என்கிற பலவீனம் குறித்துப் பலரும் விமர்சனம் செய்தனர். ஆனால், உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவின் பந்திலேயே ஒரு பிரம்மாண்ட சிக்ஸர் அடித்து, அந்த விமர்சனங்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார். இது குறித்து ஒரு பேட்டியில் பேசிய அவர், "உன்னால் இந்தச் சூழலில் விளையாட முடியாது, இது உனக்குச் சாத்தியமே இல்லை என்று யாராவது சொன்னால் எனக்குப் பிடிக்காது. ஒரு உயர்தர கிரிக்கெட் வீரராக என்னால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அப்படிச் சொல்பவர்கள் தவறு என்று நிரூபிக்க வேண்டும் என்கிற வைராக்கியம் எனக்குள் பிறக்கும்" என்று கூறியுள்ளார்.

குறிப்பாக, அவருக்கு ஏற்பட்ட முதுகு வலி காயத்தின் போது, அவர் மீண்டும் பழையபடி விளையாட முடியாது என்று பலரும் பேசினர். ஆனால், காயம் ஏற்பட்ட பிறகு நாம் எப்படிச் சிந்திக்கிறோம் என்பதுதான் முக்கியம் என்று ஸ்ரேயாஸ் கூறுகிறார். "சிலர் சொன்ன எதிர்மறையான விஷயங்களை நான் ஒதுக்கித் தள்ளிவிட்டு, என்னால் ஏன் முடியாது என்று எனக்குள்ளேயே கேள்வி கேட்டுக் கொண்டேன். காயத்திற்குப் பிறகு இன்னும் வலிமையாகத் திரும்ப வேண்டும் என்கிற எண்ணம் தான் என்னை உந்தித்தள்ளியது" என்று தனது மனமாற்றம் குறித்து அவர் விளக்கியுள்ளார்.

நீண்ட காலமாகத் தன்னைத் துரத்திய 'ஷார்ட் பால்' பலவீனம் குறித்த கிண்டல்கள் தான் அவரை மாற்றுவதற்கு தூண்டுகோலாக இருந்துள்ளது. இது குறித்து அவர் பேசுகையில், "என்னால் ஷார்ட் பால் பிரச்சனையைச் சரி செய்யவே முடியாது என்று சொன்னார்கள். அது எனக்குள் ஒரு நெருப்பை உருவாக்கியது. கடினமாக உழைத்து அதை மாற்றிக்காட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன். முன்பெல்லாம் ஷார்ட் பால் வந்தால் ஒரு ரன் எடுக்கவோ அல்லது தடுத்து ஆடவோ தான் நினைப்பேன். ஆனால் இப்போது என் மைண்ட்செட் மாறிவிட்டது. பந்து என் ஏரியாவிற்குள் வந்தால் நிச்சயம் சிக்ஸர் தான்" என்று அதிரடியாகப் பேசியுள்ளார்.

இந்த மாற்றத்திற்காக அவர் தனது பயிற்சியாளர்களான பிரவீன் ஆம்ரே மற்றும் அபிஷேக் நாயர் ஆகியோருடன் இணைந்து கடுமையாக உழைத்துள்ளார். வலைப்பயிற்சியின் போது சுமார் 50 ஓவர்கள் வரை விளையாடும் அவர், 300-க்கும் மேற்பட்ட பந்துகளைச் சந்திக்கிறார். வெறும் 'சைட் ஆர்ம்' (Sidearm) பயிற்சிகளை மட்டும் நம்பியிருக்காமல், உண்மையான பந்து வீச்சாளர்களைச் சந்திப்பதன் மூலம் தனது ரிதத்தை மேம்படுத்திக் கொண்டதாகக் கூறுகிறார். ஏபி டி வில்லியர்ஸ், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் பந்து வீசப்படும் முன் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் முறையைத் தானும் பின்பற்றுவதாக அவர் ரகசியத்தைப் பகிர்ந்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.