விளையாட்டு

ஆர்சிபி vs குஜராத் டைட்டன்ஸ்: மழை குறுக்கிட்டால் யாருக்கு வெற்றி? ஐபிஎல் விதிகளின் படி என்ன நடக்கும்?

இந்த மேட்ச் நடக்கும் மைதானத்தில் மழை பெய்ய 80 சதவீதம் வாய்ப்பு

மாலை முரசு செய்தி குழு

ஐபிஎல் 2026 தொடரின் மிக முக்கியமான குவாலிஃபையர் 1 போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகள் இன்று தர்மசாலாவில் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற குஜராத் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்நிலையில், இந்த மேட்ச் நடக்கும் மைதானத்தில் மழை பெய்ய 80 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆர்சிபி மற்றும் குஜராத் என இரண்டு அணிகளுமே லீக் சுற்றில் தலா 18 புள்ளிகளைப் பெற்றுள்ளன. ஆனால், நெட் ரன் ரேட் அடிப்படையில் ஆர்சிபி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது, குஜராத் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

இன்றைய போட்டியில் மழை பெய்து ஆட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டால், புள்ளிப் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் ஆர்சிபி அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும். ஐபிஎல் விதிகளின்படி, குவாலிஃபையர் 1, எலிமினேட்டர் மற்றும் குவாலிஃபையர் 2 போட்டிகளுக்கு என்று தனிப்பட்ட 'ரிசர்வ் டே' (Reserve Day) கிடையாது. எனவே, லீக் சுற்றில் எந்த அணி அதிக புள்ளிகள் அல்லது சிறந்த ரன் ரேட் வைத்திருக்கிறதோ, அந்த அணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு வழங்கப்படும்.

ஒருவேளை மழை பெய்து ஆட்டம் தாமதமானால், ஓவர்களைக் குறைத்து குறைந்தபட்சம் சூப்பர் ஓவர் மூலமாவது வெற்றியாளரைத் தீர்மானிக்க ஐபிஎல் விதிமுறைகள் அனுமதிக்கின்றன. ஆனால், மோசமான வானிலை காரணமாகப் பந்து வீசவே முடியாத சூழல் ஏற்பட்டால், மேலே சொன்ன விதியின்படி ஆர்சிபி அணிக்கு சாதகமான முடிவு கிடைக்கும். இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குச் செல்லும், தோற்கும் அணிக்கு குவாலிஃபையர் 2 மூலம் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

இந்த சீசனில் ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒருமுறை மோதிக்கொண்டன. இதில் தலா ஒரு வெற்றியைப் பகிர்ந்து கொண்டுள்ளன. ஆர்சிபி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாகக் கோப்பையை வெல்லத் துடிக்கிறது, அதே நேரத்தில் குஜராத் அணி 2022-ல் வென்ற சாம்பியன் பட்டத்தை மீண்டும் தக்க வைக்க முயற்சி செய்கிறது. மழை குறுக்கிடாமல் முழுமையான மேட்ச் நடந்தால், வெற்றி யாருக்கு என்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.