இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் அவரது வழக்கத்துக்கு மாறான (Unorthodox) ஆட்டத்துக்கு பெயர்பெற்றவர். இதுவே அவரைத் தனித்துவமான வீரராக நிலைநிறுத்துகிறது. ஆனால் சில நேரங்களில் இது சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.
அப்படி காலே டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், பெரிய ஸ்கோர் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பண்ட், தேவையில்லாமல் இறங்கி வந்து சிக்ஸர் அடிக்க முயன்று 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
போட்டியின் 2வது நாளில் புதிய பந்து எடுக்கப்பட்ட 4வது பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார் பண்ட்.
தனது முதல் போட்டியில் விளையாடும் சுழற்பந்து வீச்சாளர் கேஷர நுவாந்தா (Keshara Nuwantha), பண்டிற்கு நெருக்கடி கொடுத்து ஒரு ஆக்ரோஷமான ஷாட்டை ஆட வைத்தார். பண்ட் அடித்த தூக்கி அடித்த பந்து, லாங்-ஆஃப் திசையில் நின்றிருந்த ஃபீல்டரின் கைகளில் தஞ்சமடைந்தது.
முன்னதாக பயிற்சிப் போட்டியிலும் பண்ட் இதே போன்ற ஒரு தேவையற்ற ஷாட்டை ஆடித்தான் சுழற்பந்து வீச்சாளரிடம் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னதான் Unorthodox பிளேயராக இருந்தாலும், நேரத்துக்கு ஏற்ற முடிவுகளை எடுக்க வேண்டாமா என்ற கேள்வி பண்டை நோக்கி எழுப்பப்படுகிறது.
இந்திய அணியின் முன்னாள் வீரர் முஹம்மது கைஃப், "ரிஷப் பண்ட் ஆட்டமிழந்த விதத்தைப் பற்றி எனக்கு எந்தப் புகாரும் இல்லை. அவர் எப்போதும் இப்படித்தான் ஆடுவார். ஆனால், எனது புகார் அவருடைய 'காமன் சென்ஸ்' (சாதாரண அறிவு) பற்றியதுதான்! புதிய பந்து எடுக்கப்பட்ட முதல் ஓவரில், அவர் மூன்று முறை விக்கெட்டை விட்டு இறங்கி ஆட முயன்றார்." என சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார்.
மேலும் "புதிய பந்து வீசப்படும்போது, குறைந்தது 5 முதல் 6 ஓவர்கள் வரை கவனமாகப் பார்த்து ஆட வேண்டும் என்பது பாரம்பரிய டெஸ்ட் கிரிக்கெட் மரபு. பண்ட் போல அதிரடியாக ஆடுபவர்கள் கூட இந்த அடிப்படை அறிவைப் பயன்படுத்துவார்கள். ஒரு பேட்டர் 150 ரன்கள் அடித்திருந்தாலும் கூட, புதிய பந்து வரும்போது சில பந்துகளைப் பார்த்து நிதானமாகவே ஆடுவார். ஆனால் பண்ட் தர்க்கத்திற்கும் கிரிக்கெட் அறிவிற்கும் மிக வெகுதொலைவில் நின்று ஆடியுள்ளார்" எனக் காட்டமாக கூறியுள்ளார்.
பண்டின் விக்கெட் சரிவுக்கு மத்தியிலும், சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 462 ரன்கள் என்ற பிரம்மாண்டமான ஸ்கோரைக் குவித்தது. 3வது நாள் முடிவில் இலங்கை அணியை 284 ரன்களுக்கு சுருட்டி இந்தியா அணி 178 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்