rohit sharma 
விளையாட்டு

ODI கேப்டன் பதவியும் பறிபோகிறதா? நேருக்கு நேர் விவாதிக்க கிளம்பிய ரோஹித்? என்ன நடக்கிறது?

ரோஹித் சர்மா ஒருநாள் அணிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரது கேப்டன் பதவி நீடிக்குமா என்பதுதான் தேர்வுக்குழு மத்தியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது

மாலை முரசு செய்தி குழு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் தொடருக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மா, அணியின் தலைமைப் பதவி குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேர்வுக்குழுவுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடத் தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ரோஹித் சர்மா ஒருநாள் அணிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரது கேப்டன் பதவி நீடிக்குமா என்பதுதான் தேர்வுக்குழு மத்தியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது என்று கிரிக்கெட் வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தேர்வுக்குழுவின் முக்கிய நோக்கம்

Cricbuzz வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வரவிருக்கும் ஒருநாள் தொடருக்கான அணித் தேர்வு குறித்து தேர்வுக்குழுவினர் விவாதிக்கும்போது, அதன் Defining Point ரோஹித் சர்மா தலைமைப் பொறுப்பில் நீடிப்பாரா என்பதுதான். இந்த விஷயத்தை தேர்வுக்குழுவினர் ரோஹித் சர்மாவுடன் நேரடியாக விவாதிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

தற்போது மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக அகமதாபாத்தில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான சனிக்கிழமை அன்று, ஒருநாள் மற்றும் டி20 அணிகளைத் தேர்வு செய்யத் தேர்வுக்குழுவினர் கூடி ஆலோசிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஆனால், அணி அறிவிப்பு குறித்து இதுவரை தெளிவான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

முக்கிய வீரர்களுக்கு ஓய்வு தேவை

ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்குத் தேர்வு செய்யப்படும் அணியில் சில முக்கிய மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது. நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா (தொடைப்பகுதி காயம்) மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் (கால் எலும்பு முறிவு) ஆகியோர் காயம் காரணமாகக் கிடைக்க மாட்டார்கள். இதேபோல், டெஸ்ட் அணி கேப்டனான ஷுப்மன் கில், ஆசியக் கோப்பையில் விளையாடி முடித்து மூன்று நாட்களுக்குள்ளாகவே இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறார். எனவே, அவரது உடல் நலனைக் கருத்தில் கொண்டு, அவருக்கு ஒருநாள் அல்லது டி20 தொடர்கள் அல்லது இரண்டு தொடர்களிலுமே ஓய்வு அளிக்கப்படலாம் என்று தேர்வுக்குழுவினர் பரிசீலித்து வருகின்றனர்.

இந்தியாவின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் மார்ச் மாதம் சாம்பியன்ஸ் டிராபி வெற்றியை அடுத்து, ஏழு மாதங்கள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தனர். அதன் பிறகு அவர்கள் இருவரும் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர். கோலி பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு சதம் அடித்ததுடன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலும் அதிக ரன்களைக் குவித்தார். அதேசமயம், ரோஹித் சர்மா நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஒரு முக்கியமான இன்னிங்ஸை விளையாடி அசத்தியிருந்தார்.

தலைமைப் பொறுப்பை இழக்கக் காரணம் என்ன?

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மா கேப்டனாகச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கும் நிலையில், அவராகவே தனது பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்த விரும்பினால் தவிர, அவரைத் தலைமைப் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற கருத்தும் நிலவுகிறது.

ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் ஏற்கெனவே டெஸ்ட் மற்றும் டி20 வடிவங்களில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். இப்போது இருவரும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தும் ஒற்றை வடிவ வீரர்களாக மாறியுள்ளனர். இதனால், 2027-ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை வரை அவர்களது கிரிக்கெட் பயணம் நீடிக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

பி.சி.சி.ஐ. வட்டாரங்களின்படி, இந்தச் சீசனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று வெளிநாட்டு ஆட்டங்கள் மற்றும் ஆண்டின் இறுதியில் நடைபெறும் ஆறு உள்நாட்டு ஆட்டங்கள் என ஒன்பது ஒருநாள் போட்டிகள் மட்டுமே இருப்பதால், கேப்டன்ஷிப் குறித்து இவ்வளவு அவசரமாக எந்த ஒரு திடமான முடிவையும் எடுக்க வேண்டிய அவசியம் இப்போதைக்கு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சொந்த மண்ணில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை மற்றும் 2025-ஆம் ஆண்டில் உள்நாட்டில் நடைபெறும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் இருந்து அதிக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிகளைப் பெறுவதுமே பி.சி.சி.ஐ.யின் முக்கிய முன்னுரிமையாக உள்ளது.

இருப்பினும், இந்த ஒருநாள் தொடரை ஒளிபரப்பும் ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இரு ஜாம்பவான்களின் புகைப்படங்களுடன் வெளியிட்ட அதிகாரப்பூர்வ விளம்பர டீஸர், அவர்கள் இருவரும் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது என்பதைக் குறிப்பதாகப் பார்க்கப்படுகிறது. 19 நாட்களுக்குள் எட்டு ஆட்டங்கள் (ஐந்து டி20 ஆட்டங்கள் உட்பட) நடக்க இருப்பதால், வீரர்கள் சுழற்சி முறையில் பயன்படுத்தப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.