shot put winner sharmila  
விளையாட்டு

"அண்டை வீட்டார் முன் நிர்வாணமாக்கி அசிங்கப்படுத்திய கணவன்"- காமன்வெல்த் நாயகி ஷர்மிளா கடந்து வந்த நரக வாழ்க்கை!

ஷர்மிளாவுக்கு, இரண்டு வயதிலேயே போலியோ பாதிப்பு ஏற்பட்டதால் இடது கால் செயலிழந்தது...

Mahalakshmi Somasundaram

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் பாரா காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், இந்தியாவுக்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு தடகளப் பிரிவில் தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. இந்த வரலாற்றுச் சாதனையை ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 40 வயதான பாரா தடகள வீராங்கனை ஷர்மிளா தன்கர் நிகழ்த்தியுள்ளார். நேற்று நடைபெற்ற குண்டு எறிதல் (Shot Put) போட்டியில் அபாரமான திறமையை வெளிப்படுத்திய அவர், இந்தியாவுக்காக தங்கப்பதக்கத்தை வென்று நீண்டகால ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஆனால் இந்த வெற்றிக்குப் பின்னால், எண்ணற்ற சவால்களும் வேதனைகளும் நிறைந்த வாழ்க்கைப் போராட்டம் மறைந்துள்ளது. ஹரியானாவின் மகேந்தர்கர் மாவட்டத்தில் உள்ள சித்ராலி கிராமத்தைச் சேர்ந்த ஷர்மிளா, ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை சிறிய அளவிலான நிலத்தில் விவசாயம் செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். பார்வைக் குறைபாடு கொண்ட தாயும், மூன்று சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ள குடும்பத்தில் வளர்ந்த ஷர்மிளாவுக்கு, இரண்டு வயதிலேயே போலியோ பாதிப்பு ஏற்பட்டதால் இடது கால் செயலிழந்தது. மருத்துவ வசதியின்மையும் வறுமையும் காரணமாக அந்த பாதிப்பில் இருந்து முழுமையாக மீள முடியவில்லை.

கல்வியை 10-ஆம் வகுப்புடன் நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்ட ஷர்மிளாவுக்கு, சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஆனால் அவரது திருமண வாழ்க்கை கடுமையான குடும்ப வன்முறையால் நிரம்பியிருந்தது. மது மற்றும் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையான கணவர், வரதட்சணை கேட்டு அடிக்கடி தாக்கியதுடன், தொடர்ந்து இரண்டு பெண் குழந்தைகள் பிறந்ததற்காகவும் கொடுமைப்படுத்தியதாக ஷர்மிளா தெரிவித்துள்ளார். 26 வயதில், அண்டை வீட்டார் முன்னிலையில் நிர்வாணமாக்கி அவமானப்படுத்தி, இரண்டு மகள்களுடன் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும் அவர் உருக்கமாக நினைவுகூர்ந்துள்ளார். அதன் பின்னர் பெற்றோரின் வீட்டிற்குத் திரும்பிய அவர், பெண்கள் மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளர், உதவியாளர், பாதுகாவலர் என பல்வேறு வேலைகளை செய்து வாழ்க்கையை முன்னெடுத்தார்.

ஷர்மிளாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது அவரது இரண்டாவது திருமணம். 28 வயதில் அஜித் சிங்கை திருமணம் செய்த அவர், தனது இரண்டு மகள்களுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்கினார். ஷர்மிளாவின் திறமையை உணர்ந்த அஜித் சிங், அவரை பாரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஊக்குவித்ததோடு, தேவையான பயிற்சிகளையும் பெறச் செய்தார். அதன்பிறகு தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்ற ஷர்மிளா, கடின உழைப்பின் மூலம் இன்று இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்று நாட்டின் பெருமையாக உயர்ந்துள்ளார்.

தனது வெற்றி குறித்து பேசிய ஷர்மிளா, "இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வென்றதில் அளவிட முடியாத மகிழ்ச்சி அடைகிறேன். இது என்னுடைய கனவு மட்டுமல்ல, என் தாயின் கனவும் கூட. இந்தப் பதக்கத்தை என் தாய்க்கு சமர்ப்பிக்கிறேன். இன்னும் பல சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்க தொடர்ந்து போராடுவேன்," என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.