விளையாட்டு

"நாங்களும் நிறைய பேச முடியும்" - கைகுலுக்காமல் சென்ற இந்திய அணி - ஷோயப் அக்தர் அதிருப்தி!

நாங்கள் நிறைய பேச முடியும். சண்டைகள், சச்சரவுகள், வீட்டில் கூட நடக்கும்..

மாலை முரசு செய்தி குழு

ஆசியக் கோப்பை 2025-ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்குப் பிறகு, இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் வழக்கம் போல கைகுலுக்க மறுத்து, உடனடியாக டிரஸ்ஸிங் ரூமுக்கு சென்றது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் செயல், பாகிஸ்தான் அணியினருக்கு ஏமாற்றத்தை அளித்த நிலையில், அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஷோயப் அக்தர் தனது மனவருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய ஷோயப் அக்தர், "எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இதைப் பார்ப்பது மிகவும் மனதைக் காயப்படுத்துகிறது. நான் என்ன சொல்வதென்றே தெரியாமல் இருக்கிறேன். இந்தியாவிற்கு வாழ்த்துகள். ஆனால், தயவுசெய்து இதை அரசியலாக்காதீர்கள். இது ஒரு கிரிக்கெட் போட்டி, அதை அரசியலாக்காதீர்கள். நாங்கள் உங்களைப் பற்றி நல்ல விஷயங்களைச் சொல்லியிருக்கிறோம். நாங்கள் நிறைய பேச முடியும். சண்டைகள், சச்சரவுகள், வீட்டில் கூட நடக்கும். அதை மறந்துவிட்டு, நகர்ந்து செல்லுங்கள். இது கிரிக்கெட் விளையாட்டு. கைகுலுக்குங்கள். கண்ணியத்தைக் காட்டுங்கள்" என்று மனம் நொந்து பேசினார்.

பாகிஸ்தான் கேப்டனுக்கு ஆதரவு:

இதையடுத்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா, போட்டிக்குப் பிறகு நடந்த பரிசு வழங்கும் விழாவில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தார். அக்தர், கேப்டனின் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். "சல்மான் அலி ஆகா செய்தது சரி. அவர் பரிசு வழங்கும் விழாவிற்குச் செல்லாதது நல்லது" என்று அக்தர் கூறினார்.

மேலும் அக்தர், இந்தப் போட்டியின் முடிவைப் பற்றிப் பேசும் போது, "பாகிஸ்தான் அணியின் ஆட்டம் மிகவும் ஏமாற்றமளிப்பதாக இருந்தது" என்று குறிப்பிட்டார். மேலும், அவர் தனது அணி சர்வதேச தரத்துடன் ஒப்பிடும்போது, 'க்ளப்' அளவிலான கிரிக்கெட் ஆடுகிறது என்று விமர்சித்தார். பாகிஸ்தானின் பேட்டிங் வரிசை மீண்டும் தோல்வியடைந்தது என்றும், டெயிலெண்டரான ஷஹீன் ஷா அப்ரிடி மட்டும் ஏன் சிறப்பாக விளையாடினார் என்றும் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், "பகல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும், நமது ராணுவ வீரர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையிலும், கைகுலுக்க வேண்டாம்" என்று அறிவுறுத்தியதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.