இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே குவாஹாத்தியில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்திய அணிக்குப் பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. சொந்த மண்ணில் இந்திய அணி இப்படித் தடுமாறுவதைப் பார்த்து, ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கோபத்தைக் கொட்டி வருகின்றனர். எனவே, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரை உடனடியாகப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற ஹாஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
ரசிகர்கள் கோபத்திற்குக் காரணம் என்ன?
பேட்டிங்கில் பேரழிவு: தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் குவித்த நிலையில், இந்திய அணி மூன்றாவது நாள் ஆட்டத்தில் 201 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. 120 ரன்களைக் கடப்பதற்கு முன்பாகவே 6 விக்கெட்டுகளைத் தாரை வார்த்து, சொந்த வீட்டிலேயே அவமானப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
கேப்டன் சுப்மன் கில் இல்லாத நிலையில், கேப்டன் பொறுப்பை ஏற்ற ரிஷப் பண்ட், டி20 கிரிக்கெட் ஆடுவது போலப் பொறுப்பில்லாமல், மார்கோ ஜான்சன் வீசிய பந்தை அடித்து விக்கெட்டைப் பறிகொடுத்தார். அணி இக்கட்டான நிலையில் இருக்கும்போது, கேப்டனே இப்படிச் செய்தது ரசிகர்களைப் பெரிதும் எரிச்சலூட்டியது.
கௌதம் காம்பீர் பயிற்சியாளராக வந்த பிறகு, சொந்த மண்ணிலேயே இந்தியா டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து தோல்வியைச் சந்திப்பதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். குறிப்பாக, அணியில் ஐபிஎல் வீரர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், ரஞ்சி டிராபியில் சிறப்பாக ஆடும் வீரர்களைத் தேர்வு செய்வதில்லை என்றும் ரசிகர்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர்.
தொடர் தோல்விகள்: இதுமட்டுமல்லாமல், இதற்கு முன்பு நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் இந்தியா சொந்த மண்ணில் தொடரை இழந்தது. இப்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் தோல்வியின் விளிம்பில் நிற்கிறது. சொந்த மண்ணில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா டெஸ்ட் போட்டியில் தோல்வியைச் சந்தித்தது கம்பீரின் பயிற்சியின் கீழ் தான் என்றும் சில ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர். இந்திய அணி இந்த 2வது போட்டியில் இன்னிங்ஸ் தோல்வி பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.