வைபவ் முதல் வாஷிங்டன் வரை... புதிய T20 அணி அறிவிப்பு! நிராகரிக்கப்பட்ட RCB வீரரின் உருக்கமான போஸ்ட்! 
விளையாட்டு

வைபவ் முதல் வாஷிங்டன் வரை... புதிய T20 அணி அறிவிப்பு! நிராகரிக்கப்பட்ட RCB வீரரின் உருக்கமான போஸ்ட்!

ஐபிஎல் தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் மிகச்சிறந்த ஃபார்மில் இருந்தபோதிலும், அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இடதுகை/சுழல் ஆல்ரவுண்டர்கள் தேர்வில் இருப்பதால் அவருக்கு இந்தத் தொடரிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

மாலை முரசு செய்தி குழு

இந்திய கிரிக்கெட் வீரர் க்ருணால் பாண்டியா, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 அணியில் இடம் பெறவில்லை.

இந்த சூழலில் நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் சமூக வலைத்தள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

டெல்லியில் நடக்கவிருக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கான அணியில் க்ருணால் பாண்டியா இடம் பெறுவார் என சில ஊடகங்கள் கணித்திருந்தன.

ஆனால் நேற்று அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் சுழற்பந்து ஆல் ரவுண்டர்களாக அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருந்தனர். மேலும் முக்கிய சுழற்பந்து வீச்சாளர்களாக வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவி பிஷ்னாய் இடம்பெற்றுள்ளனர்.

Krunal Pandia insta story

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமை தாங்கும் இந்த அணியில் நீண்ட நாட்களுக்கு பின்பு நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இடம்பெற்றுள்ளார். ஆனால் உடற்தகுதிச் சான்றிதழைப் பெறுவதைப் பொறுத்தே அணியில் விளையாடுவார்.

இதைத் தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் "நம்பிக்கை இன்னும் உயிரோடு இருக்கிறது" என இரண்டு கிராஸ் விரல்கள் மற்றும் தேசிய கொடியுடன் பதிவிட்டுள்ளார் க்ருணால்.

ஃபார்மில் இருந்தும் வாய்ப்பு இல்லை!

கடைசியாக க்ருணால் 2021ம் ஆண்டு இந்திய ஜெர்சியில் விளையாடினார்.

T20 போட்டிகளில், அவர் இந்திய அணிக்காக இதுவரை 19 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 10 இன்னிங்ஸ்களில் 124 ரன்கள் எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 24.80 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 130.52 ஆகவும் உள்ளது. அவரது அதிகபட்ச ஸ்கோர் 26* ஆகும்.

பந்துவீச்சில், 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர், விக்கெட் சராசரி 36.93 வைத்துள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 4/36 ஆகும்.

Krunal Pandia RCB

ஆனால் கடந்த சில ஐபிஎல் சீசன்களில் கலக்கலாக விளையாடியிருக்கிறார் க்ருணால். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி தொடர்ச்சியாக ஐபிஎல் கோப்பைகளை வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தார்.

2025 ஐபிஎல் இறுதிப் போட்டியில் 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தி RCB-யின் முதல் கோப்பை வெற்றிக்கு உதவினார். அந்த சீசனில் 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

2026 சீசனில் 9 இன்னிங்ஸ்களில் 226 ரன்கள் (ஸ்ட்ரைக் ரேட் 145.80) அடித்ததுடன் 14 விக்கெட்டுகளையும் அணியின் வெற்றிக்கு உதவினார். தன்னுடைய பேட்டிங் திறமையை மீண்டும் கண்டறிந்து புதுமையாக வெளிபடுத்தியிருந்தார்.

ஐபிஎல் தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் மிகச்சிறந்த ஃபார்மில் இருந்தபோதிலும், அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இடதுகை/சுழல் ஆல்ரவுண்டர்கள் தேர்வில் இருப்பதால் க்ருணால் பாண்டியாவுக்கு இந்தத் தொடரிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

Jasprit Bumrah

இந்தியா vs ஆப்கானிஸ்தான்

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் வருகின்ற செப்டம்பர் 13ம் தேதி இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே முதல் டி20 போட்டி நடைபெறுகிறது. மூன்று போட்டிகளைக் கொண்ட இந்த தொடரின் அடுத்தடுத்த போட்டிகள் 15 மற்றும் 17ம் தேதிகளில் நடைபெறுகின்றன.

அறிவிக்கப்பட்ட அணியில் வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், அபிஷேக் சர்மா என அனுபவமும் அதிரடியும் கலந்த டாப் ஆர்டர் உள்ளது. கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், வைஸ் கேப்டன் திலக் வர்மா மற்றும் சிவம்பே துபே ஆகியோர் நடுவரிசையைப் பலப்படுத்துகின்றனர்.

நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் என மூன்று ஆல்ரவுண்டர்களுடன், வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவி பிஷ்னோய் சுழற்பந்து வீச தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் உடன் ஹர்ஷித் ராணா கூடுதல் வேகப்பந்து வீச்சாளராக சேர்க்கப்பட்டுள்ளார்.

பும்ராவுடன் சேர்த்து நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா ஆகியோரும் அணியில் விளையாடுவது உடற்தகுதியைப் பொறுத்தே அமையும்.

15 பேர் கொண்ட இந்திய டி20 அணி:

ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, நிதிஷ் குமார் ரெட்டி*, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர்*, வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா*, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா*.

( * உடற்தகுதி சான்றிதழ் தேவைப்படும் வீரர்கள்).

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்