விளையாட்டு

இந்தியா - இங்கிலாந்து அரையிறுதி மழையால் ரத்தானா யாரு ஃபைனல் போவாங்க? ஐசிசியின் அதிரடி விதிமுறை - ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி!

இந்த விதிமுறையின்படி பார்த்தால், இந்தியாவிற்கு இது ஒரு பின்னடைவாக அமையக்கூடும்......

மாலை முரசு செய்தி குழு

சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் 2026 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி போட்டிகள் நாளை (மார்ச்.3) புதன்கிழமை தொடங்குகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவும் நியூசிலாந்தும் மோதுகின்றன. அதேபோல், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள 2வது அரையிறுதிப் போட்டியில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. சூப்பர் 8 சுற்றின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவிடம் தோற்றுத் தட்டுத்தடுமாறிய இந்திய அணி, பின்னர் ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

இந்தச் சூழலில், ஒருவேளை போட்டி நடைபெறும் நாளில் மழை குறுக்கிட்டு ஆட்டம் ரத்தானால் என்ன நடக்கும் என்ற கவலை ரசிகர்களிடையே எழுந்துள்ளது.இந்தியா - இங்கிலாந்து இடையிலான அரையிறுதிப் போட்டி மழையினால் பாதிக்கப்பட்டால், அதனை ஈடுசெய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒரு 'ரிசர்வ் டே' (கூடுதல் நாள்) ஒதுக்கியுள்ளது. ஒருவேளை ஆட்டம் தாமதமானால், வியாழக்கிழமை கூடுதலாக 90 நிமிடங்களும், வெள்ளிக்கிழமை கூடுதலாக 120 நிமிடங்களும் நடுவர்களுக்கு அவகாசம் வழங்கப்படும். எப்படியாவது ஒரு அணிக்குக் குறைந்தபட்சம் 5 ஓவர்கள் வீசப்பட்டு ஆட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்பதே அதிகாரிகளின் திட்டமாகும்.

இருப்பினும், மழை விடாமல் பெய்து ஆட்டம் முற்றிலும் கைவிடப்படும் நிலை ஏற்பட்டால், வெற்றியாளரைத் தீர்மானிக்க ஐசிசி ஒரு முக்கிய விதிமுறையை வைத்துள்ளது.ஆட்டம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டால், சூப்பர் 8 சுற்றின் புள்ளிகள் பட்டியலின் அடிப்படையிலேயே இறுதிப்போட்டிக்குச் செல்லும் அணி தீர்மானிக்கப்படும். இந்த விதிமுறையின்படி பார்த்தால், இந்தியாவிற்கு இது ஒரு பின்னடைவாக அமையக்கூடும். ஏனெனில், சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து அணி தனது பிரிவில் 3 வெற்றிகளுடன் முதலிடத்தைப் பிடித்திருந்தது. இந்தியா தனது பிரிவில் 2 வெற்றிகளுடன் இரண்டாம் இடத்தையே பிடித்திருந்தது. எனவே, போட்டி ரத்தானால் புள்ளிகள் அடிப்படையில் இங்கிலாந்து அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுவிடும். இதேபோல் மற்றொரு அரையிறுதியும் ரத்தானால், தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் மோதும் சூழல் உருவாகும்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்த அரையிறுதி மோதல் ஒரு சுவாரசியமான வரலாற்றைக் கொண்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த அரையிறுதியில் இங்கிலாந்து இந்தியாவை வீழ்த்தி, பின்னர் பாகிஸ்தானையும் ஜெயித்து கோப்பையைக் கைப்பற்றியது. அதற்குப் பழிவாங்கும் விதமாக, 2024 ஆம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தை அரையிறுதியில் வீழ்த்தியது. அந்த உத்வேகத்துடன் இறுதிப்போட்டிக்குச் சென்ற இந்தியா, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை வென்றது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.