இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடையே கவனம் பெற்று இருக்கிறது. இதற்கு பல சுவாரசியமான காரணங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை ஒவ்வொன்றாக இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்து சென்றுள்ளனர். இதில் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றதால் தொடர் தற்போது சமநிலையில் உள்ளது. 3வது டெஸ்ட் போட்டியில் வெல்லும் அணிதான் தொடரை கைப்பற்றும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அது எளிதான காரியம் அல்ல என்பதைத்தான் கடந்த கால சுவடுகள் சொல்கின்றன.
லார்ட்ஸ் மைதானம் பொதுவாகவே பந்து வீச்சாளர்களுக்கான மைதானமாக இருந்து வருகிறது. அதிலும் கடந்த 3-4 ஆண்டுகளாக லார்ட்ஸ் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்து இருக்கிறது. கடந்த போட்டியில் சொந்த நாட்டு ரசிகர்கள் மத்தியில் இங்கிலாந்து அணி மோசமாக தோற்றதால் இந்த போட்டியை எப்படியாவது வென்று விட வேண்டும் என்ற முனைப்பில் பயிற்சியில் மட்டுமல்ல மைதானத்தை தயார்ப்படுத்துவதிலும் தீவிரம் காட்டி வருகிறது இங்கிலாந்து கிரிக்கெட் குழு.
முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் மைதானம் தயார் செய்யப்பட்டு வருவதாக அந்நாட்டில் இருந்து வரும் அனைத்து ஊடக செய்திகளும் தெரிவிக்கின்றன. மேலும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோர் அணிக்கு திரும்புவது அந்த அணிக்கு கூடுதல் பலம்.
இங்கிலாந்து அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் தரமாகவே உள்ளது. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் இந்திய அணிக்கு எதிராக சிம்ம சொப்பனமாகவே திகழ்கிறார். இந்திய அணிக்கு எதிராக அதிக சதங்கள், அரை சதங்கள் அடித்த வீரரும் ஜோ ரூட் தான். துரதிர்ஷ்டவசமாக இந்த தொடரில் அவரால் சரியாக ஜோலிக்க முடியவில்லை. முதல் டெஸ்ட்டில் அரை சதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் லார்ட்ஸ் மைதானத்தில் அவரிடம் இருந்து கணிசமான பங்களிப்பை பார்க்கலாம். ஏன் என்றால் இம்மைதானத்தில் அவரது ஆட்டாம் சாதனைக்கு கட்டியம் கூறுகிறது.
லார்ட்ஸ் மைதானத்தில் 6 சதங்கள் அடித்து அதிக சதங்கள் அடித்தவர்களின் முதல் பட்டியலில் ஜோ ரூட் உள்ளார். மேலும் இந்த மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த வீரரும் இவர்தான். எனவே மூன்றாவது டெஸ்டில் ஜோ ரூட் பேட் காட்டும் வித்தையை காண ரசிகர்கள் ஆவலோடு இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. இருப்பினும் அவருக்கு அது சுலபமாக இருக்காது. கடந்த போட்டியில் அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சுதான். எனவே ஜோ ரூட்டின் ரூட்டில் நமது பந்து வீச்சாளர்கள் தடக்கல்லாக இருப்பார்களா அல்லது லார்ட்ஸ் மைதானத்தில் அவரது பேட்டிங் பசிக்கு தீணியாவார்களா என்பதையும் பார்த்துவிடலாம்.
இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானம் அதன் பல்வேறு சிறப்புகளால் கிரிக்கெட்டின் மெக்கா என அழைக்கப்படுகிறது. அவற்றில் ஒன்று இங்குள்ள கௌரவ பலகை. இந்த கௌரவ பலகையில் இடம் பெற வேண்டும் என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவு. லார்ட்ஸ் பெவிலியனில் வைக்கப்பட்டுள்ள இந்த கௌரவ பெயர் பலகையில் சதம் அடித்த வீரர்களின் பெயர்கள், ஒரு இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் எடுத்த வீரர்களில் பெயர்கள் பொறிக்கப்படும். அதற்கான ஒரு ஆக்ரோசமான போட்டியாகவும் இது அமையும். வரலாறு அல்லவா….
இந்திய வீரர்களில் பும்ரா மட்டுமே இந்த மைதானத்தில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தி இந்த கௌரவ பெயர் பலகையில் இடம் பிடித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக தற்போது வரை திகழ்கிறார். லார்ட்ஸில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட்டில் மீண்டும் அவர் அணிக்கு திருகிறார். இந்த மைதானம் அவருக்கு ஏற்கனவே பரிட்சையம் என்பதால் கேப்டன் சுப்மன் கில்லுக்கு இது பலமாக அமையும்.
பேட்டிங்கில், இந்திய வீரர்கள் ராகுல் மற்றும் ரகானே ஆகியோர் சதம் அடித்து இந்த கௌரவ பெயர் பலகையில் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் ராகுல் தற்போதைய தொடரில் இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் நம்பிக்கை அளிக்கும். இந்த முறை வேகப்பந்துக்கு ஏற்ற வகையிலும் அதிக ஸ்விங் ஆகும் வகையிலும் லார்ட்ஸ் மைதானம் தயார் செய்யப்பட்டு இருப்பதால் பேட்டர்கள் தடுமாற அதிக வாய்ப்புகள் உள்ளன.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு இங்கிலாந்தின் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இருந்துதான் தொடங்குகிறது. ஆம்… இந்தியா தனது முதலாவது டெஸ்ட் போட்டியை 1932 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக இங்குதான் ஆடியது. அப்போது முதல் தற்போது வரை இந்த மைதானத்தில் நடந்துள்ள 19 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே இந்தியா வென்றுள்ளது. அதிலும் கடந்த மூன்றில் இரண்டில் இந்தியா வென்றுள்ளது சாதகமான ஒரு செய்தி. 4 போட்டிகள் சமனில் முடிவடைந்துள்ளன. 12 போட்டிகளில் இங்கிலாந்து அணி வென்று ஆதிக்கம் செலுத்துகிறது.
தற்போதுள்ள டெஸ்ட் அணியில் இருக்கக் கூடியவர்களில் பேட்டர்களை பொறுத்த வரை அனைவரும் நல்ல பார்மில் உள்ளனர். இருப்பினும் லார்ட்ஸ் மைதானம் பவுலர்களில் ராஜ்ஜியம் கொண்டது என்பதால் அதிக கவனம் தேவை. அதே நேரம் நமது பவுளர்களும் அட்டகாசமான பார்மில் உள்ளனர். பும்ரா, சிரஜ், ஆகாஷ் தீப் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். மேலும் பிரசித் கிருஷ்ணாவுக்கு மற்றாக அர்ஷ்தி சிங் களம் இறக்கப்பட்டால் மேலும் பலமாக இருக்கும் என்பது அனைவரின் எதிர்ப்பார்க்க உள்ளது.
கடந்த 2 போட்டிகளில் இந்திய அணி டாஸ்ட் தோற்றது குறிப்பிடத்தக்கது. லார்ட்ஸ் மைத்தானத்தில் முதல் செஷன் அதிக விக்கெட்டுகள் விழும். எனவே டாஸ் வெல்வது போட்டியின் வெற்றிக்கு கணிசமான பங்களிப்பை வழங்கும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.