அண்ணன் மோசடி செய்ததால், தம்பியை கடத்திய மர்ம நபர்கள்!

அண்ணன் மோசடி செய்ததால், தம்பியை கடத்திய மர்ம நபர்கள்!
Published on
Updated on
1 min read

திருவேற்காடு அருகே இசை கச்சேரியை முடித்துவிட்டு நண்பர்களுடன் வீடு திரும்பிய இளைஞரை, ஒரு மர்ம கும்பல் கடத்திச் சென்றுள்ளனர்.

மதுரையை சேர்ந்தவர் தேவ் ஆனந்த்(29). தேவ் ஆனந்த் தனது, நண்பர்களுடன் சேர்ந்து இசை கச்சேரி நடத்தி வருகிறார். நேற்று இரவு நுங்கம்பாக்கத்தில் கச்சேரி ஒன்றை முடித்துவிட்டு நண்பர்களுடன் காரில் திரும்பிக்கொண்டிருந்தார்.

தாம்பரம் - மதுரவால் பைபாஸ், திருவேற்காடு அருகே சென்றுகொண்டிருந்த பொழுது , ஒரு மர்ம கார், தேவ் ஆனந்த் சென்ற காரை, முந்திச் சென்று, ஆனந்தின் காரை மடக்கியுள்ளது. பின்னர் அந்த காரில் இருந்து இறங்கி வந்த மர்ம நபர்கள், தேவ் ஆனந்தை மட்டும் கடத்தி, அவர்களுடன் அழைத்துச் சென்றுள்ளனர்.  

இந்த சம்பவத்தில், அதிர்ச்சியடைந்த தேவ்-ன் நண்பர்கள், இது குறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். நண்பர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தேவ் ஆனந்திற்கு அண்ணன் ஒருவர் இருப்பதாகவும், அவர் பெயர் சிரஞ்சீவி என்பதும், சிரஞ்சீவி மதுரையில் சீட்டு நடத்தி ரூ 3 கோடி வரை மோசடி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. 

இதனால் பணத்தை இழந்தவர்கள் யாரேனும் தான் தேவ் ஆனந்தை காரில் கடத்தி சென்றிருக்க வேண்டும் என சந்தேகம் எழுந்துள்ளது. 

தேவ் ஆனந்தை கடத்தி சென்ற கும்பலை பிடிக்க திருவேற்காடு போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com