கடலூர் மாவட்டம் நெய்வேலி 29-வது வட்டத்தில் உள்ள ரவுண்டானாவில் ஹைமாஸ் விளக்கு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தின் அருகே மின்சாரம் செல்வதற்காக ப்ரேக்கர் பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜூன் 24-ம் தேதியன்று பட்டப்பகலில் மதுப்பிரியர் ஒருவர் கொளுத்தும் வெயில் என்றும் பாராமல் பிரேக்கர் பெட்டியின் மீது படுத்திருந்த காட்சிகள் அங்கிருந்த அனைவர் மத்தியிலும் கிலியை ஏற்படுத்தியது.
கரணம் தப்பினால் மரணம் என்பதுபோல மின்சாரத்தின் ஆபத்தை உணராமல் மதுபோதையில் அலப்பறையில் ஈடுபட்ட ஆசாமியை திட்டியவாறே அனைவரும் நகர்ந்தனர்.
இதேபோல சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள நாவாந்தெரு பகுதியில் மதுப்பிரியர் ஒருவர் நட்டநடுரோட்டில் கோணியை விரித்து படுத்திருந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
C
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலச்சம்பாளையத்தைச் சேர்ந்த மின் ஊழியர் சங்கர் என்பவர் சாலையில் படுத்திருந்தபோது, தலையில் வாகனம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதன் சிசிடிவி காட்சிகள் பரவி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் அதே போல சாலையில் படுத்திருந்த மதுப்பிரியரின் செயல் காண்போரை பதற்றத்தில் ஆழ்த்தியது. இதுகுறித்த விசாரணையில், சாலையில் படுத்திருந்தவர் கட்டிடத் தொழிலாளி ராஜேஷ்குமார் என்பது தெரியவந்தது.
சமீபகாலமாக இளைஞர்கள் பலர், பட்டப்பகலிலேயே மதுபோதையில் சாலையில் இவ்வாறு அலம்பலில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டு கோளாக உள்ளது.