பாலாறு அணை புதுப்பிக்கப்படுவதாக வந்துள்ள அறிவிப்பு ராணிப்பேட்டை மட்டுமின்றி திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. அதே நேரம் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பதும் அம்மாவட்டங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் கோரிக்கை.
வட தமிழகத்தின் வறட்சியை போக்க 222 கிலோமீட்டர் பயணம் மேற்கொள்ளும் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரே அணை இதுதான். அதுவும் 1858 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. 166 ஆண்டுகளுக்குப்பிறகு இந்த அணை புணரமைக்கப்பட உள்ளதென வெளியாகியுள்ள அரசின் அறிவிப்பு 4 மாவட்ட விவசாயிகளின் காதுகளில் தேனை பாய்ச்சியிருக்கிறது.
கர்நாடகத்தில் உருவாகி ஆந்திராவைக் கடந்து வட தமிழகத்திற்கு வந்து 222 கிலோமீட்டர் தொலைவு வரை சென்று கடலில் கலக்கிறது பாலாறு. இதன் குறுக்கே, ராணிப்பேட்டை மாவட்டம் புதுப்பாடி, திருமலைச்சேரி இடையே 800 மீட்டர் நீளமும், இரண்டரை மீட்டர் உயரத்துடனும் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டிருக்கிறது இந்த பாலாறு அணை.
இதன் இடது புறம் உள்ள மதகு கால்வாய் வழியாக காவேரிப்பாக்கம், மகேந்திரவாடி பகுதிக்கும், வலது புறம் உள்ள மதகு கால்வாய் வழியாக தூசி ,மாமண்டூர், சக்கர மல்லூர் போன்ற பகுதிகளுக்கும் வெளியேற்றப்படும் நீரால், சுமார் 3லட்சம் ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. நாளடைவில் அது குறைந்துபோனதும் வேறு கதை.
இது தவிற திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள 319 ஏரிகளை இந்த அணையிலிருந்து செல்லும் நீர்தான் நிரப்புகிறது.
இந்த அணையிலிருந்து வெளியேறும் நீர் தமிழகத்தின் 3ஆவது பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் மற்றும் மகேந்திரவாடி அணைகளை நிரப்பி, உபரி நீரானது அங்கிருந்து பல ஏரிகளை கடந்து பூண்டி ஏரிக்கு வருகிறது. பூண்டி நீர்தேக்கம் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்று.