அறுந்து விழுந்த ரோப் கயிறு - 100 அடி ஆழ கிணற்றில் விழுந்த 3 தொழிலாளர்கள்..

அறுந்து விழுந்த ரோப் கயிறு - 100 அடி ஆழ கிணற்றில் விழுந்த 3 தொழிலாளர்கள்..
Published on
Updated on
2 min read

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே அமைந்துள்ளது அருங்குறிக்கை கிராமம். இந்த கிராமத்தில் கண்ணன் என்பவர் அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றை ஆழப்படுத்தும் பணியை மேற்கொண்டு வந்தார்.

இதற்கான பணிகள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. கிணறு ஆழப்படுத்தும் இந்த பணியில் பெருங்குருக்கை கிராமத்தைச் சேர்ந்த தணிகாச்சலம், நரிப்பாளையத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன், நெய்வனை கிராமத்தைச் சேர்ந்த முருகன் உள்ளிட்டோர் ஈடுபட்டு வந்தனர்.

பொக்லைன் எந்திரத்திரத்தில் பெரிய ரோப் கயிற்றில் இரும்பினாலான பக்கெட்டை கட்டி அதில் தொழிலாளர்கள் இறங்கி வேலையில் ஈடுபட்டு வந்தனர். 80 அடி ஆழத்தில் இருந்த கிணறு ஆழப்படுத்தி சுமார் 100 அடி ஆழம் வரை தோண்டப்பட்டது.

இந்நிலையில் ஜூலை 30-ம் தேதியன்று இரவு சுமார் 8 மணியளவில் ரோப் கயிறு மூலம் தணிகாச்சலம், ஹரி கிருஷ்ணன், முருகன் ஆகியோர் கிணற்றுக்குள் இறக்கப்பட்டனர்.

அப்போது எதிர்பாராத விதமாக ரோப் கயிறு அறுந்து போனது. இதில் தரை மட்டத்தில் இருந்து 100 அடி ஆழத்தில் மூவரும், தடார் என விழுந்தனர்.

இதில் கை கால்கள் முறிந்து போனதைத் தொடர்ந்து ஒரு சில நிமிடங்களிலேயே மூன்று தொழிலாளர்களும் துடிதுடித்து உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் கிணற்றில் கிடந்த தொழிலாளர்களின் உடல்களை கயிறு கட்டி மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

உயிரிழந்தவர்களின் உறவினர்கள், உடல்களைப் பார்த்து கதறியழுததுடன், பணிக்கு அழைத்து வந்த நபர், பொக்லைன் எந்திரத்தின் ஓட்டுநர் மற்றும் நிலத்தின் உரிமையாளர் ஆகிய 3 பேரையும் கைது செய்ய வேண்டும் எனக் கூறினர்.

மேலும் கிணறு ஆழப்படுத்துவதற்கு ஜெலட்டின் குச்சிகள் வைத்து வெடிக்கச் செய்ததாகவும், இதன் காரணமாகவே கிணற்றின் உள்ளே சிக்கியவர்கள் இறந்து போனதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டியதால் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து இறந்தவர்களின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். கிணறு தூர்வாரும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் சடலமாக மீட்கப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com