கருணாநிதி.. இந்தப் பெயரை நீக்கிவிட்டு தமிழகத்தின் அரசியல் வரலாற்றை பதிவு செய்ய முடியாது. அந்த அளவுக்கு தமிழக அரசியலில் நீக்கமற நிறைந்துவிட்டவர் தான் கருணாநிதி. ‘’பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன்’’ என்று ‘பராசக்தி’ படத்தில் வசனம் எழுதியிருப்பார் கருணாநிதி. திரைப்படத்துக்காக எழுதப்பட்ட இந்த வசனம் தான் கருணாநிதியின் வாழ்க்கையை சொல்லும் ஒருவரி வரலாறு.
1953 ஆம் ஆண்டு கல்லக்குடி எனும் ஒரு சிற்றுரின் தமிழ்ப்பெயரை மீட்டெடுக்க தண்டவாளத்தில் தலைவைத்து போராடத் தொடங்கி, கண் மூடிய பிறகு தன் தலை சாய்க்க இடம் கிடைப்பது வரை போராட்டத்திலேயே கழிந்தது கலைஞரின் வாழ்க்கை... கிட்டத்தட்ட 65 ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஓயாமல் உழைத்த சூரியன் என கலைஞரை புகழ்கிறார்கள் திமுக தொண்டர்கள். அது உண்மை தான்.
1950 முதல் 1970 வரை கிட்டடத்தட்ட 20 ஆண்டுகள் தமிழ் சினிமா இவரின் கதையாலும், வசனத்தாலும் பாட்டாலும் மெருகேறியிருந்தது. 1947ல் வெளியான ராஜகுமாரி தொடங்கி, 2011ல் வெளியான பொன்னர் - சங்கர் வரை சுமார் 64 வருடங்கள் திரையுலகில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என பல்வேறு துறைகளிலும் பணியாற்றியிருக்கிறார் இந்தக் கலைஞர். கருணாநிதியின் பன்முகத் திறமையை கண்டு சிலாகித்து எம்.ஆர்.ராதா கலைஞர் என பட்டம் சூட்டினார். அதுவே பின்னாளில் இந்திய அரசியல் அரங்கில் அழிக்க முடியாத பெயராகிப் போனது. ஆம் பல்வேறு வடஇந்திய அரசியல் தலைவர்களும் கலைஞர் ஜி என்றுதானே அழைத்தார்கள் கருணாநிதியை,
இவரின் எழுத்து தமிழன்னையின் சிரசில் ஏறிய மற்றொரு மாணிக்க கல்.. இவரின் பேச்சு...தமிழின் அழகு தெரியாதவர்களுக்கு கொடுக்கப்பட்ட விசிட்டிங் கார்டு...“மனசாட்சி உறங்கும்போது மனக்குரங்கு ஊர் சுற்ற கிளம்பி விடுகிறது,“ என்ற பூம்புகார் திரைப்பட வசனம்தான் அந்த காலத்தில் மேடைப் பேச்சு பயில விரும்புவர்களுக்கெல்லாம் ஆத்திச்சூடி. பாடல்களை மட்டுமே இசைத் தட்டுக்களாக கேட்ட தமிழர்களை, வசனங்களை இசைத் தட்டுகளாக கேட்க வைத்தவர் கலைஞர் என்று வைரமுத்து சொன்ன கூற்று உண்மை தான்...
இலக்கியம், திரைத்துறை என கோலோச்சிய கருணாநிதி அரசியலிலும் புதிய தடம் பதித்திருக்கிறார். கட்சித் தொண்டனாக, அண்ணாவுக்கு தம்பியாக, சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, முதலமைச்சராக, கோடிக்கணக்கான தொண்டர்களை கொண்ட ஒரு இயக்கத்தின் தலைவராக இவர் ஆற்றிய சாதனைகள் ஏராளம். இதுவரை 13 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டிருக்கும் கருணாநிதி, இதுவரை ஒரு தேர்தலில்கூட தோல்வியடைந்ததில்லை.
முதலமைச்சராக பதவி வகித்த போது கலைஞர் நடைமுறைப்படுத்திய பல திட்டங்கள் இந்திய அரசியலுக்கு முன்னோடிகள். 1974 ஆம் ஆண்டு இவர் நிறைவேற்றிய மாநில சுயாட்சித் தீர்மானம், 1989 ஆம் ஆண்டு ஆசியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் கால்நடைப் பல்கலைகழகம் உருவாக்கியது, கைம்பெண் மறுமண உதவித்திட்டம் அறிமுகப்படுத்தியது, பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம் தொடங்கியது, கைரிக்சா வழக்கத்தை ஒழித்தது, 1990 ஆம் ஆண்டு அரசு வேலைவாய்ப்புகளில் 30 விழுக்காடு பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி சட்டமியற்றியது, அதே 1990 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியது, பெண்களுக்கு சொத்தில் சம உரிமைச் சட்டமியற்றியது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வாய்ப்பு வழங்கியது என கலைஞரின் தொலைநோக்கு சாதனைப் பட்டியல்களின் நீளம் கொஞ்சம் அதிகம்.
அண்ணா மறைவுக்குப் பிறகு முதல்வரான போதுதான் ’உடன்பிறப்பே’ என முரசொலியில் கடிதம் எழுதத் துவங்கினார் கருணாநிதி. 1971 முதல் ’உயிரினும் மேலான உடன்பிறப்பே’ என்று பேசவும் துவங்கினார். கருணாநிதி முரசொலியில் எழுதி வந்த ’உடன்பிறப்பே’ என்ற கடிதத் தொடர், உலகின் நீண்ட தொடர்களில் ஒன்று. முரசொலி துவங்கியதிலிருந்து, 2016ல் உடல்நலம் குன்றும் வரை இதனை எழுதி வந்தார் கருணாநிதி.
1953ல் செய்திகளில் அடிபட்ட கருணாநிதி, 69 களுக்குப் பிறகு தினம்தோறும் தலைப்புச் செய்தியானார். தலைப்புச் செய்திகளை தீர்மானித்தார். அரசியல் வாழ்க்கையில் மாபெரும் உயரங்கள், மிக மோசமான பள்ளங்கள் என இரண்டையும் மாறிமாறி பார்த்த அரசியல் ஆளுமைகளில் கருணாநிதியை போன்று எவருமில்லை. தமிழக அரசியலில் ஒவ்வொரு அசைவும், எழுச்சியும், எதிர்ப்பும் அவரை சுற்றியே சுழன்றன. மாநில அரசியலிலும் மத்திய அரசியலிலும் திமுக தலைவராக, தமிழ்நாட்டின் முதலமைச்சராக கருணாநிதி ஏற்படுத்திய மாற்றங்கள் வரலாற்றுப் பக்கங்கள். ஒரு கவியரங்கில் இவரைப் பார்த்து கவிஞர் வாலி இப்படிச் சொல்வார்... ஏம் முதல் பிஎம் வரை ஓயாது உழைக்கும் சிஎம் நீ... உண்மை தானே...
சூரியன் மறைவதில்லை... பிரபஞ்சத்தின் எங்கோ ஒரு மூலையில் ஒளிர்ந்து கொண்டே இருக்கும்... திராவிட முன்னேற்றக் கழகத்தின் சூரியன் கருணாநிதி... மறைந்து விடவில்லை... தொண்டர்களின் மனங்களில் ஒளிர்ந்து கொண்டே தான் இருக்கிறார்...