
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி பதவியேற்ற பின்னர், தமிழக அமைச்சர்களின் இலாக்காக்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்:
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பின்னர், முதலமைச்சராக ஸ்டாலினும், 34 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர். அதன்பின்னர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதே தவிர, விரிவாக்கம் என்பது நடைபெறாமல் இருந்தது.
இதனிடையே, சேப்பாக்கம் - திருவல்லிகேணி தொகுதியின் எம்.எல்.ஏ உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுப்பது குறித்தும், தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் எனவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுகவின் இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், இன்று ஆளுநர் மாளிகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றார்.
உதயநிதி அமைச்சர் ஆனதும் தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உதயநிதி அமைச்சராக பதவியேற்ற கையோடு அமைச்சரவையில் அதிரடி மாற்றம் நடைபெற்றுள்ளது. அதன்படி, தமிழக அமைச்சர்களுக்கு துறை ரீதியான இலாக்காக்கள் மாற்றப்பட்டுள்ளது.
பட்டியல் இதோ:
1. அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு.
2. கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கீடு.
3. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கீடு.
4. வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கீடு.
5. சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு வனத்துறை ஒதுக்கீடு.
6. விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மெய்யநாதன், சுற்றுச்சூழல் துறையை தொடர்ந்து கவனிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
7. இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் கூடுதலாகச் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுத்துறை ஒப்படைப்பு!
8. அமைச்சர் ஐ.பெரியசாமி வசம் இருந்த புள்ளியியல் துறை பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு.
9. அமைச்சர் ஆர்.காந்தி வசம் இருந்த கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.