காதலிக்கு இளைஞர் அளித்த சர்ப்ரைஸ்... வீட்டை விட்டு வெளியேறி காஷ்மீரில் திருமணம்...

ஜோலார்ப்பேட்டையைச் சேர்ந்த இளைஞர், காதலியுடன் காஷ்மீருக்கு சென்று திருமணம் செய்து கொண்டார். ஊர் ஊராக சுற்றித் திரிந்த காதல் ஜோடி இறுதியில் காவல்நிலையத்தை நாடி வந்தது ஏன்? பார்க்கலாம் இந்த தொகுப்பில்
காதலிக்கு இளைஞர் அளித்த சர்ப்ரைஸ்... வீட்டை விட்டு வெளியேறி காஷ்மீரில் திருமணம்...

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்ப்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியைச் சேர்ந்தவர் தௌலத். இவரது 22 வயது மகளான சுமையா பேகம் என்பவர் திருப்பத்தூரில் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்நிலையில் சுமையா பேகமும், அதே பகுதியைச் சேர்ந்த தங்கத்தமிழன் என்ற இளைஞரும் கடந்த 4 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.

ஆனால் இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவரது வீட்டிலும் பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் கடந்த 5-ம் தேதியன்று கல்லூரி செல்வதாக கூறி வெளியேறிய சுமையா பேகம், வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து சுமையா பேகத்தின் பெற்றோர் ஜோலார்ப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இதனிடையே வீட்டை விட்டு வெளியேறிய தங்கத்தமிழன் - சுமையா பேகம் ஜோலார்ப்பேட்டைக்கு சென்று தஞ்சமடைந்தனர்.

தங்கள் காதலுக்கு பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதாக கூறி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். அப்போது போலீசார், இளம்ஜோடியிடம் எங்கு வைத்து திருமணம் செய்து கொண்டீர்கள் என கேட்டனர்.

இதற்கு தங்கத்தமிழன், தன் காதலியை அழைத்துக் கொண்டு காஷ்மீருக்கே சென்று அங்கு வைத்து உறையும் பனியில் தாலி கட்டி மனைவியாக ஏற்றுக் கொண்டதாகவும் கூறினார்.

காதலிக்கு சர்ப்ரைஸ் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால், தங்கத்தமிழன் இப்படியொரு சினிமா பாணியிலான முயற்சி எடுத்தது தெரியவந்தது. ஜோலார்ப்பேட்டையில் இருந்து சென்னை சென்று அங்கிருந்து காஷ்மீரை அடைந்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து பெங்களூருக்கு வந்து சுற்றிப் பார்த்து விட்டு பின்னர் சொந்த ஊருக்கே வந்தடைந்தனர்.

ரோஜா, பம்பாய், உயிரே பட பாணியில் காதல் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த இளைஞர் பாராட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com