
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை பிரச்சினையால் அக்கட்சியின் இணை-ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனி அணியாக பிரிந்தனர். கடந்த ஜூலை 11 ஆம் நாள் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டினர். அந்தப் பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் வழக்கு மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அந்த பொதுக்குழு செல்லாது என்று உத்தரவிட்டார். மேலும் ஜூன் 23 ஆம் நாளுக்கு முன்பிருந்த நிலையே தொடர வேண்டும் என்று அந்த தீர்ப்பில் கூறினார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி உயர் வழக்கு மன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
வழக்கு விசாரணையின் போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், "கட்சியில் பொதுக்குழுவே முக்கியமானது. பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தனி நீதிபதியின் உத்தரவால் கட்சியே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது” என்று வாதிட்டனர்.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், "மிகப்பெரிய இயக்கத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் மட்டுமே நிர்வாகிகளை தேர்வு செய்ய முடியாது. இது கட்சி விதிகளுக்கு முரணானது" என்றனர். எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்துள்ள வழக்கின் இறுதி விசாரணை முடிந்து நாள் குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு வருகிற ஆகஸ்ட் 30 ஆம் நாள் (செவ்வாய்க்கிழமை) அல்லது செப்டம்பர் 1 ஆம் நாள் (வியாழக்கிழமை) வெளியாகும் என கூறப்படுகிறது.