தான் சொல்லும் பொய்யை அனைவரும் திருப்பிச் சொல்ல வேண்டும் என்று நினைக்கும் கட்சிதான் பாஜக என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது.
எந்த வகைப்பட்ட கட்சி பாஜக:
"எய்ம்ஸ் கோயல்ஸ்கள்" என்ற தலைப்பில் முரசொலி நாளேட்டில் தலையங்கம் ஒன்று இன்று வெளியாகியுள்ளது. அதில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில் 5 கோடி ரூபாய் செலவில் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்ட நிலையில், 95 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்திருப்பது பாஜக எந்த வகைப்பட்ட கட்சி என்பதை உணர்த்துவதாகக் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் தான் பொய் சொல்வது மட்டுமல்ல, அந்த பொய்யை தன்னைப் போலவே அனைவரும் திருப்பிச் சொல்ல வேண்டும் என்று நினைக்கும் கட்சி பாஜக என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது.
கோயபல்சையே மிஞ்சிவிடக் கூடிய பொய்:
மேலும், பொய் சொல்வது அவர்களுக்கு கைவந்த கலையாகும் எனவும், பொய்யை கூச்சமே இல்லாமல் சொல்வார்கள் என்றும், அதிலும் எய்ம்ஸ் விவகாரத்தில் அவர்கள் சொன்ன பொய்கள், கோயபல்சையே மிஞ்சிவிடக் கூடியவை என்றும் முரசொலி கடுமையாக சாடியுள்ளது.
ஒற்றை செங்கல் நாட்டியதே சாதனை:
ஒற்றைச் செங்கல் நாட்டியது மட்டுமே அவர்களது சாதனை என்பதை நட்டா அறிய வேண்டும் என்றும், இதனை பார்வையிட மீண்டும் ஒருமுறை அவர் மதுரைக்கு வர வேண்டும் என்றும் முரொசொலி தலையங்கம் வெளியிட்டுள்ளது.