தமிழக பாஜக தலைவராகிறார் அண்ணாமலை ஐபிஎஸ்? டெல்லி தலைமை அதிரடி!!

தமிழக பாஜக தலைவராகிறார் அண்ணாமலை..!
தமிழக பாஜக தலைவராகிறார் அண்ணாமலை ஐபிஎஸ்? டெல்லி தலைமை அதிரடி!!

தமிழ்நாட்டில் பாஜக மாநில தலைவராக தற்போது எல்.முருகன் இருந்து வருகிறார். நடந்து முடிந்த தேர்தலில் எல்.முருகன் தலைமையில் அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிட்டது பாஜக. அதில் 4 இடங்களில் மட்டுமே வெற்றியை பெற்றது. ஆனால் தேர்தலுக்கு முன்பு தொகுதி பங்கீட்டின் போது 70 இடங்கள் வேண்டும் என அதிமுகவுடன் மல்லுக்கட்டியது பாஜக. 

தமிழ்நாட்டில் பாஜக மேல் மக்களுக்கு அதிருப்தி நிலவுவதால், நீண்ட இழுபறிக்கு பிறகு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இருப்பினும் பாஜக கேட்ட தொகுதிகளை அதிமுக ஒதுக்கவில்லை என்ற குற்றசாட்டும் எழுந்தது. 

தேர்தல் முடிவில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று அரியாசனம் ஏறியுள்ள நிலையில், பாஜகவை கைவிட்டுள்ளது அதிமுக. தமிழ்நாடு மாநில தலைவர் எல்.முருகன் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் போது அதிமுக அமைதி காத்து வருவது பாஜக மேலிடத்தை கோபமுறச் செய்துள்ளது. 

அதிமுகவில் ஏற்கனவே உட்கட்சி பூசல் நிலவுவதால், சசிகலாவின் வருகைக்கு பிறகு ஒருவேளை அதிமுகவில் பிளவு ஏற்பட்டால், பாஜகவிற்கு அது சாதகமான சூழல். இந்த சூழலை பாஜக பயன்படுத்தினால் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்ற பாஜகவிற்கு வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

இந்த இக்கட்டான சூழலில் அனைத்து விதத்திலும் புது வியூகம் வகுக்கவும், தமிழ்நாட்டு மக்களிடம் பாஜக குறித்து ஏற்பட்டுள்ள மனநிலையை மாற்றவும், தேர்தல் களத்தில் இறங்கி பணி செய்யவும், வாக்கு வங்கியை அதிகரிக்கவும் ஒரு திறமையான தலைமை என்பது தேவை. 

அந்த வகையில், தமிழக பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை ஐபிஎஸ் தேர்ந்தெடுக்கப்படுவதாக கூறுப்படுகிறது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த அண்ணாமலை, கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றியவர். அங்கு பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிய பின், 2019-ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்து தாயகம் திரும்பினார். 

பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்து வந்த அவர் 2020-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். அவரது செயல்களால் நெகிழ்ந்த பாஜக தலைமை, தமிழக பாஜக துணை தலைவராக நியமித்தது. தொடர்ந்து தேர்தலில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் களமிறங்கினார். யாரும் எதிர்பாராத வண்ணம் 68 ஆயிரத்து 553 வாக்குகளை பெற்று அசத்தினார் அண்ணாமலை. இருப்பினும் திமுக 24 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இருப்பினும் கட்சியில் சேர்ந்த இரு ஆண்டுகளில் தேர்தலை சந்தித்து 68 ஆயிரம் வாக்குகள் பெற்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார் அண்ணாமலை. ஆக ஆணி வேர் ஆட்டம் கண்டு அதிமுக கதிகலங்கி நிற்கும் இந்த நேரத்தில் பாஜகவை வழிநடத்தி வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com