தமிழக பகுஜன் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதியன்று சென்னை பெரம்பூரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
பிரபல கூலிப்படைக் கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள், அதிமுகவைச் சேர்ந்த மலர்க்கொடி, பாஜகவைச் சேர்ந்த அஞ்சலை உள்ளிட்ட 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சம்போ செந்திலைத் தேடி வடமாநிலங்களுக்கு சென்ற போலீசாருக்கு இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சென்னையை கலக்கிய பிரபல ரவுடி நாகேந்திரன் என்பவரின் மகன் அஸ்வத்தாமன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடசென்னையில் சில வருடங்களுக்கு முன்பு வரை பிரபல தாதாவாக வலம் வந்தவர் நாகேந்திரன். இவருக்கு அஸ்வத்தாமன் மற்றும் அஜித் ராஜூ என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவர்களில் மூத்த மகன் அஸ்வத்தாமன் காங்கிரஸ் கட்சியிலும் இளைய மகன் அஜித் பாஜகவிலும் உள்ளனர். அஸ்வத்தாமனுக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஏற்கெனவே பழைய பகை இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள ஒரக்காடு ஊராட்சியில் 155 ஏக்கர் நிலம் விற்பனை செய்யப்பட்டபோது அதிலும் அஸ்வத்தாமனின் தலையீடு இருந்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி ஒருவர் அந்த நிலத்தை வாங்கவிருந்த நிலையில் அஸ்வத்தாமன், தலையிட்டு அதில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 ஏக்கர் நிலத்தைக் கேட்டு கட்டப்பஞ்சாயத்து செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது ஆம்ஸ்ட்ராங், அஸ்வத்தாமனை எச்சரித்ததுடன், சின்னப்பையன் போல நடந்து கொள் என அறிவுரையும் வழங்கியதாக தெரிகிறது.
இதில் அவமானத்துக்குள்ளான அஸ்வத்தாமன், சிறையில் உள்ள தந்தை நாகேந்திரனை சந்தித்து நடந்ததை கூறினார். அப்போது நாகேந்திரன் சிறைக்குள் இருந்தவாறே ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர் மணீஷ் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இது தொடர்பாக மணீஷ் நாகேந்திரன் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் மீஞ்சூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஜெயப்பிரகாஷ் என்பவரிடம் துப்பாக்கியை காட்டிய வழக்கில் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டார்.
தான் கைதானதற்கு ஆம்ஸ்ட்ராங்தான் காரணம் என்றும் அஸ்வத்தாமன் நினைத்திருக்கிறார். அதிலிருந்து ஆம்ஸ்ட்ராங் - அஸ்வத்தாமன் இடையே பகை வளர்ந்தது.
இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்த ரவுடி நாகேந்திரனுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அப்போது ஆம்ஸ்ட்ராங்கின் எதிரிகளான புன்னை பாலு, அருள், ஹரிஹரன், அஞ்சலை, மலர்க்கொடி, ஆருத்ரா நிதி நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் நாகேந்திரனை சந்தித்துள்ளனர்.
ஆக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததில் ரவுடி நாகேந்திரன் மற்றும் அவரது மகன்கள் அஸ்வத்தாமன், அஜித் ராஜூவுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகித்தனர்.
இதில் விநோதம் என்னவென்றால் ஆம்ஸ்ட்ராங் குழந்தையின் பிறந்தநாள் விழாவில் ஆஸ்வத்தாமன் பங்கேற்றுள்ளார். அதே போல ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அஸ்வத்தாமன் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
தற்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஸ்வத்தாமனை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்த போலீசார் ரவுடி நாகேந்திரனிடமும், அவரை சந்தித்தவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சேலம் சிறையில் உள்ளவரும், செந்திலின் கூட்டாளியுமான ஈசா மற்றும் எலி யுவராஜ் ஆகியோரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.