

தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது.
ஜூன் 28-ம் தேதி மற்றும் ஜூலை 3-ம் தேதியன்று என இரண்டு கட்டங்களாக கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்படி இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் கோலாகலமாக நடைபெற்றது.
பனையூரில் உள்ள இல்லத்தில் இருந்து சரியாக காலை 6 மணிக்கு புறப்பட்ட விஜய், திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்திற்கு 6.30 மணியளவில் சென்றடைந்தார்.
இதையடுத்து 9.30 மணியளவில் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் செல்போன்கள் பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை என்ற வரையறையின்படி, மாணவர்கள் மற்றும் பெற்றோரின் செல்போன்கள் டோக்கன் கொடுத்து காவலர்களால் வாங்கி வைக்கப்பட்டன. பின்னர் 10 மணியளவில் நிகழ்ச்சி நடக்கும் அரங்கிற்கு விஜய் வந்தடைந்தார்.
பின்னர் மாணவர்களிடையே பேசிய விஜய் சில அதிரடி கருத்துக்களை கூறி அரங்கை அதிர வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் இடத்தைப் பெற்ற சென்னையைச் சேர்ந்த பிரதிக்ஷா, திருப்பூரைச் சேர்ந்த மகாலட்சுமி, செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி ஆகியோருக்கு சால்வை அணிவித்து பாராட்டியவர் வைரக் கம்மலை பரிசாக வழங்கினார்.
மேலும் 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் 6 மாணவர்களுக்கு விஜய் பரிசுகளை வழங்கினார். தர்மபுரியைச் சேர்ந்த சந்தியா, தேவதர்ஷினி, திண்டுக்கல்லைச் சேர்ந்த காவ்யா ஷீலா, ஈரோட்டை சேர்ந்த கோபிகா, ராமநாதபுரத்தைச் சேர்ந்த காவ்யா ஜனனி, திருநெல்வேலியைச் சேர்ந்த சன்ஷனா ஆகியோருக்கு சால்வை அணிவித்து வைர மோதிரத்தை பரிசாக வழங்கினார்.
வழக்கமாக என் நெஞ்சில் குடியிருக்கும் என்ற வார்த்தையிலேயே பேச்சை தொடங்குவார். ஆனால் இந்த முறை, மாணவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தே பேச்சை தொடங்கினார்.
எந்த துறையை எடுத்தாலும் 100 சதவீத உழைப்பை செலுத்தினால் வெற்றி நிச்சயம் என அறிவுரை வழங்கியவர்,மாணவர்கள் அரசியலையும் படிக்க வேண்டும் என கூறினார்.
மாணவர்களிடையே பேசும் விஜய், அரசியல் குறித்த கருத்துக்களை பேசுவார் என எதிர்பார்ப்புகளையும் விஜய் பூர்த்தி செய்துள்ளார். மாணவர்களானவர்கள் மறைமுகமாக அரசியலில் ஈடுபட வேண்டும் என்றும், நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கும் விசாலமைன பார்வை இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் தலைவர்கள் தேவை என கூறியவர் தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் குறித்தும் விஜய் பேசினார்.
போதைப் பொருள் புழக்கம் அதிகமாகியிருப்பதற்கு அரசும், அரசாள்பவர்களும் மட்டுமே காரணம் என கூறி விட முடியாது. மாணவர்கள் எந்த நிலையிலும் போதைப்பொருட்களை உபயோகிக்கக்கூடாது என பேசியதோடு, Say no to drugs என உறுதிமொழியை சொல்ல, மாணவர்கள் அதை திரும்பக் கூறினர்.
கடந்த ஆண்டு, காந்தி, காமராஜர், அம்பேத்கர், பெரியார் ஆகியோரை படியுங்கள் எனக் கூறிய நிலையில், இந்த ஆண்டு என்னென்ன பேசப் போகிறார் என கேள்வி எழுந்தது.
ஆனால் மாணவர்களுக்கான நிகழ்ச்சியாகவே நடத்திய விஜய், அரசியல் குறித்து பேசும் மேடை இதுவல்லக் கூறியது மக்களை சற்று ஏமாற்றமடைய வைத்தது.