ஷேப்வியர் அணியும் பெண்கள் கவனத்திற்கு...! அழகுக்கு விலை ,.. ஆரோக்கியமா...?

ஷேப்வியர் அணியும் பெண்கள் கவனத்திற்கு...!  அழகுக்கு விலை ,.. ஆரோக்கியமா...?
Published on
Updated on
2 min read

பெண்கள் எப்போதுமே தங்களை அழகாகவும் வசீகரமாகவும் காட்டிக்கொள்ள  விரும்புவர். பொதுவெளியில் பலர் தன்மேல் தனி கவனம் செலுத்த வேண்டும் என்பதே பல பெண்களின் பிரியமாக இருக்கும். தங்களின் அழகை மெருகேற்ற பல அழகு சாதன பொருட்கள் பயன்படுத்துவர்.

அழகு ஒருபுறம் இருக்க,  உடல்வாகும் ஒருவித வசீகர தோற்றத்தை காண்பிக்கும் என்பதால், தற்போதெல்லாம், சற்று உடல்  பருமனாக உள்ள பெண்கள் தங்களை மெலிதாக காட்டிக்கொள்ள ' ஷேப்வியர் ' அணிந்து கொள்கின்றனர். பெரும்பாலும் பார்ட்டி வியர்கள் அணியும்போது ' ஷேப்வியர் ' அணிவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். 

ஷேப்வியர்கள்  அழகுக்கு மெருகூட்டினாலும், ஆரோக்கியம்  என்று வரும்போது ஆபத்தாகவே இருக்கிறது எனலாம். ஏனெனில்,  ஷேப்வியர்கள் என்றாலே பருமனான தேகத்தை சுருக்கி மெல்லியதாய் காட்டவே வடிவமைக்கப்பட்டவை. அதற்காக உடல் சதைகளை சற்று அழுத்தி சுருக்கி காண்பிக்கும். இதனால் பெண்களின் வயிற்று பகுதியில் உள்ளுறுப்புகள் பாதிப்படைகின்றன. அதோடு, வயிறு, இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் இறுக்கத்தை ஏற்படுத்தும். இதனால் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதோடு, தசைகள் தளர்வின்றி மறத்துப்போகும் நிலை உருவாகும்.  

மேலும், ஷேப்வியர் அணியும்போது சிறுநீர் கழிப்பதில் அசௌகரியம் ஏற்படும். இதனால் பெரும்பாலும் இதனைப் பயன்படுத்தும் பெண்கள், அடிக்கடி சிறுநீர் கழிப்பதையே தவிர்க்கின்றனர். இதனால் வரும்  பின்விளைவுகளை அவர்கள் அறிவதே இல்லை. நீண்டநேரம் சிறுநீர் கழிக்காமல் இருப்பதால் சிறுநீர் பாதையில்  தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. 

இதனால், சிறுநீர் பையில்  மட்டுமல்லாது, நுரையீரல் பிரச்சனைகளும் ஏற்படும் அபாயம் உண்டு.  ஏனெனில், வயிற்று பகுதி தசைகளில் அதிக இறுக்கம் ஏற்படுவதால் நுரையீரல் செயல்பாடு பாதிப்படைந்து, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு சுவாச பிரச்சனைகள் வெகுவாக வரும். 

சீரான ரத்த ஓட்டம் என்பது உடலின் செயல்பாடுகளுக்கு அவசியமானதாகும். ஆனால், ஷேப்வியர் பயன்படுத்துவதன் மூலமாக ரத்த ஓட்டத்தின் சீர் நிலையை தடுக்கிறோம் என்பது தான் உண்மை. தசைப்பகுதிகள் அழுத்தம் கொடுப்பதால் அந்த பகுதிகளுக்கு அதிகமாக ரத்த அழுத்தம் தேவைப்படும். அப்போது இதயத்திலிருந்து அந்த பகுதிக்கு ரத்த ஓட்டம்  அதிகமாக கடத்தப்படும். அப்போது தேவையற்ற ரத்த கட்டிகள் உருவாக காரணமாகலாம். இதனாலும் பின்னாளில் உடலில் பிரச்சனைகள் வரலாம். 

ஷேப்வியர் பயன்படுத்தும்போது, வயிற்றில் உள்ள தசைகள் குறுக்கப்படுவதால் உள்ளுறுப்புகளில் குடல் பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு செரிமான கோளாறு ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும், ஷேப்வியர் அடிக்கடி அணிவதால் தசைகளில் ஏற்படும் அதிகப்படியான அழுத்தமும்  தளர்வும் தசைகளை வலுவிழக்கச்செய்கின்றன. 

இதனால் இயல்பாக வேலைகளை  செய்ய இயலாமல் அவதிப்படும் நிலை உருவாகும். அழகுக்காக முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்ற பெயரில் ஆரோக்கியத்திற்கு பங்கம் விளைவிக்கும் ஷேப்வியர்களை பெரும்பாலும் தவிர்ப்பதே நல்லது. 

' அழகு என்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் தான் ' என்பதை  பெண்கள் உணரவேண்டும். அழகை ஆராதிப்பதை விட ஆரோக்கியத்தை ஆரத்தழுவிக்கொள்வதே  சாலச்சிறந்தது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com