நீட் தேர்வுக்கு நோ... மாநிலக் கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்கள் என்ன?

ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில், நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையைச் சேர்ந்தவர் உள்பட 14 பேர் கொண்ட குழு தயாரித்த மாநிலக் கல்விக் கொள்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
ஓய்வு நீதிபதி முருகேசன் தலைமையிலான 14 பேர் கொண்ட குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கையை சமர்ப்பித்த காட்சி.
ஓய்வு நீதிபதி முருகேசன் தலைமையிலான 14 பேர் கொண்ட குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கையை சமர்ப்பித்த காட்சி.

இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கை என்பது மத்திய அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டது. 1986-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டதற்கு மாற்றாக 34 ஆண்டுகளுக்கு பிறகு தேசியக் கல்விக் கொள்கையில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

இந்த முறைக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு மாநிலத்திற்கென கல்விக் கொள்கையை உருவாக்கும் முயற்சியை கையில் எடுத்தது.

அதன்படி மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக 2022 ஜூன் 1-ம் தேதியன்று ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

14 பேர் கொண்ட குழு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆலோசனை செய்தனர்
14 பேர் கொண்ட குழு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆலோசனை செய்தனர்

கல்வியியல் எழுத்தாளர் மாடசாமி, மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், பேராசிரியர் ராம சீனிவாசன், சவீதா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எல்.ஜவஹர்நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவனத்தின் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமானுஜம், சூர்யாவின் அகரம் அறக்கட்டளையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ தாமோதரன் உள்ளிட்டோர் மாநிலக் கல்விக் கொள்கையை தயார் செய்வதில் மும்முரமாக இறங்கினர்.

தற்போது மாநில அரசு கல்விக்கொள்கையை தயார் செய்த 14 பேர் கொண்ட குழு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்துள்ளது. 600 பக்கங்கள் அடங்கிய இந்த அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.

இதில் தேசியக் கல்விக்கொள்கையில் கூறப்பட்ட பல கருத்துக்களுக்கு மாற்றாக திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. முக்கியமாக 3, 5, 8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வேண்டாம் என அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு முறைக்கு தற்போது வரை இந்தியா முழுவதும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் மக்களவையிலும் நீட்தேர்வு குறித்தும், அதில் ஏற்பட்ட முறைகேடு குறித்தும் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், விவாதத்துக்கு அழைப்பு விடுத்தும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டது.

இவ்வாறு இந்திய அரசியலில் முக்கிய அங்கமாக வகிக்கும் நீட் தேர்வை தொடர்வதற்கு மாநில அரசுகள் விருப்பம் தெரிவிக்காதிருக்கின்றன. அதன்படி தமிழ்நாடு அரசு தயாரித்த மாநில அரசுக் கல்விக் கொள்கையிலும் நீட் தேர்வு இருக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல நீட்தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள், தனியார் கல்வி நிலையங்கள் விளம்பரம் செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும் என இடம்பெற்றுள்ளது.

கல்லூரி சேர்க்கையின் போது, பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண்களை மட்டும் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்றும், 11-ம் வகுப்பு மதிப்பெண்களையும் பகுப்பாய்வு செய்து கல்லூரியில் துறைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

பள்ளியில் தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கைகளையே கடைபிடிக்க வேண்டும் என்றும், இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை கற்குமாறு வற்புறுத்தக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

5 வயது பூர்த்தியான குழந்தைகள் ப்ரீ கேஜி, யூ-கேஜி என அல்லாமல் நேரடியாக முதல் வகுப்பில் சேரலாம் என்றும் முக்கிய அம்சம் இடம்பெற்றுள்ளன.

பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு உயர்கல்வியில் 1 சதவீதம் இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மாநிலக் கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ளது.

முக்கியமாக கல்வி என்பது மாநிலப்பட்டியலுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என கூறியதோடு, மாணவர்களுக்கு மனஅழுத்தம் தரும் வகையிலான கல்வி முறை அகற்றப்பட வேண்டும் என்னும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரைகள் மீது அரசு கருத்து கேட்டு அதன் பிறகு அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com