பெண்களையும் கருவறைக்கு அழைத்துச் சென்ற பங்காரு அடிகளார்!

செங்கல்பட்டு மாவட்டம் மேல் மருத்துவத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயிலில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவியவர் பங்காரு அடிகளார். இந்த கோயிலுக்கு அம்மனை வழிபடுவற்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். மேல்மருத்துவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களால் 'அம்மா' என்று பக்தியுடன் அவர் அழைக்கப்பட்டு வந்தார். 

தமிழ்நாட்டில் ஆன்மீக புரட்சி முதன்முதலாக கொண்டு வந்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். ஆம், கோயில் கருவறைக்குள் ஆண்கள் மட்டுமே சென்றுவந்த நிலையில், பெண்களும் கருவறைக்குள் செல்லலாம் என்ற மாபெரும் புரட்சியை செயல்படுத்தினார்.

ஆதிபராசக்தி கோயிலுக்கு மாலை போட்டுக்கொண்டு வருகைதரும் செவ்வாடை பக்தர்கள், கோயில் கருவறையில் உள்ள சுயம்பு அம்மனுக்கு தாங்களே அபிஷேகம் செய்யும் முறையை கொண்டு வந்தார். அதுமட்டுமன்றி மாதவிடாய் என்பது ஒரு கழிவுதான் என்றும், அது பாவம் இல்லை என்று கூறி, மாதவிடாய் காலத்திலும் பெண்கள் கோயில் கருவறைக்குள் சென்று அம்மனை வழிபடும் முறையை நடைமுறைக்கு கொண்டு வந்தார். 

பங்காரு அடிகளாரின் மேல்மருத்துவர் சித்தர் பீடம், பெண்களை மையப்படுத்தி ஒரு அமைப்பை எப்படி கட்டமைக்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம். நிதி வசூலிப்பதில் இருந்து அந்த நிதியை நிர்வாகம் செய்வது வரை அங்கு எல்லோரும் பெண்களே. அரசியல் கட்சிகளுக்கு கிராமங்கள் தோறும் கிளை இருக்கிறதோ இல்லையோ, பங்கார அடிகளாரின் சித்தர் பீடங்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் செயல்பட்டு வருகிறது.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்ட நிகழ்வு மிகப் பெரிய சமயப் புரட்சியாக பார்க்கப்பட்டது.  மேலும், உயர்சாதி மத குருக்கள் மட்டுமே தமிழகத்தில் மத நிறுவனங்களை உருவாக்க முடியும் என்ற விதியை உடைத்தெரிந்தவர் பங்காரு அடிகளார். 

மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து வந்து மத குருவாக உயர்ந்த அவர், பின்தங்கிய நிலையில்  இருந்த மேல்மருவத்தூரை, கல்வி மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்ட நகராக மாற்றிய பெருமை இவரையே சாரும். 

இவருக்கு மனைவி லட்சுமி அம்மாள், மகன்கள் ஜி.பி.செந்தில் குமார், ஜி.பி. அன்பழகன் ஆகியோர் உள்ளனர். இரு மகள்களும் உள்ளனர். 

ஆசிரியராக பொது வாழ்க்கையை தொடங்கிய பங்காரு அடிகளார், பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார். ஆதிபராசக்தி தொண்டு நிறுவன மருத்துவக் கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். இதன்மூலம் மருத்துவம், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் தொழில்நுட்பக் கல்லூரிகள் என இவரது கல்வி நிறுவனங்களில் லட்சணக்கான மாணவ - மாணவிகள் பட்டம் பெற்றுள்ளனர்.

ஆன்மிகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்த இவருக்கு, இந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் சக்தி வழிபாட்டு மையங்கள் ஏராளமான உள்ளன. இவரின் ஆன்மிக சேவையை பாராட்டி கடந்த 2019 ஆம் ஆண்டு பங்காரு அடிகளாருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு சிறப்பித்தது. 

இந்நிலையில், வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பங்காரு அடிகளார், மாரடைப்பால் மாலை 6 மணி அளவில் காலமானார். 

மேல்மருத்தூரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பக்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதேபோல், அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக அமைப்பினர், ஆதிபராசக்தி அறக்கட்டளை சார்பில் செயல்பட்டு வரும் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். 

ஆன்மீக குருவும், பக்தர்களால் அம்மா என அழைக்கப்பட்டு வரும் பங்காரு அடிகளாரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com