அடேங்கப்பா இது லிஸ்டிலேயே இல்லையே... எடப்பாடி, பன்னீரை பதறவைத்த சிலுவம்பாளையம் சுரேஷ்!!

அடேங்கப்பா இது லிஸ்டிலேயே இல்லையே... எடப்பாடி, பன்னீரை பதறவைத்த சிலுவம்பாளையம் சுரேஷ்!!
Published on
Updated on
2 min read

ஜெயலலிதா காலத்தில் எடப்பாடி தொகுதியில் பழனிசாமிக்கு இணையாக செல்வாக்கோடு வலம்வந்தவர் தான் எடப்பாடி சுரேஷ். பழனிசாமி முதல்வர் பதவிக்கு வந்ததும் படிப்படியாக ஓரம்கட்டப்பட்டார் சுரேஷ். இதனால் கடும் அதிருப்தி அடைந்த சுரேஷ் சசிகலா பக்கம் சாய்ந்தார். அதைத் தொடர்ந்து தொலைபேசி உரையாடலில் "அம்மா லாக்டவுன் முடிஞ்சதும் முதல் கூட்டம் எடப்பாடியில நான் ஏற்பாடு செய்யுறேன்ம்மா நீங்க வரணும்மா’ என்று சுரேஷ் கூற அதற்கு ‘சரிப்பா சரிப்பா" என்கிறார் சசிகலா. மேலும் சசிகலாவுடன் பேசியதற்காக கட்சியிலிருந்து நீக்கவும் பட்டார் சுரேஷ்.

இந்நிலையில் இவர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் அனுப்பிய நோட்டிஸ் தமிழக அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சுரேஷின் சார்பில் வழக்கறிஞர் தமிழேந்தி அனுப்பியுள்ள  சட்ட ரீதியாக நோட்டீசில் “எனது கட்சிக்காரான சுரேஷ் கடந்த 1991இல் இருந்து அதிமுகவில் உறுப்பினராக இருந்து வருகிறார். (எண் 22-178676). தொண்டராக கட்சியில் சேர்ந்து எடப்பாடி நகர 17ஆவது வார்டு பிரதிநிதியாகவும், 1998ஆம் ஆண்டு ஜெயலலிதாவால் சேலம் மாவட்ட மீனவரணி செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். இன்றுவரை அதிமுக உறுப்பினர் அட்டை வைத்திருக்கிறார்.

இந்நிலையில், கடந்த ஜூலை 5ஆம் தேதியன்று நீங்கள் (ஓ.பன்னீர், எடப்பாடி) இருவரும் எடப்பாடி சுரேஷை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளீர்கள்.

அதிமுக கட்சிக்கு கடந்த 10-1-2017 இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், 25-1-2017 அன்று 7ஆவது தேசிய வாக்காளர் தினம் டெல்லியில் நடைபெறுவதாகவும்,அந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறும் பொதுச் செயலாளர் என்ற முறையில் சசிகலாவுக்கு தேர்தல் ஆணையத்தால் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.

ஆனால் 12-09-2017 அன்று தங்கள் இருவராலும் ஏற்பாடு செய்யப்பட்டு சென்னையில் நடைபெற்ற அதிமுகவில் பொதுக்குழுவில் சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி நீங்கள் ஒருங்கிணைப்பாளராகவும், இணை ஒருங்கிணைப்பாளராகவும் கழக விதிகளில் இல்லாத பதவிகளை உருவாக்கிக்கொண்டு பொறுப்பு வகிக்கிறீர்கள். அந்த பொதுக்குழுவின் தீர்மானங்களை எதிர்த்து சசிகலா தொடுத்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தைத் தோற்றுவித்த எம்ஜிஆர் இயக்கத்தை ஆரம்பிக்கும்போதே கழக விதிகளை வகுத்துள்ளார். கழக விதி 43இன்படி பொதுச் செயலாளரை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதிமுக விதிகளின்படி தாங்கள் இருவரும் (பன்னீர், எடப்பாடி) வகிக்கும் பதவிகள் ஏதும் இல்லை. கழக விதிகளின்படி பொதுச் செயலாளர் மட்டுமே ஒருவரை கட்சியில் இருந்து நீக்க முடியும். தங்கள் இருவருக்கும் இல்லை.

மேலும் நீக்க அறிவிப்பில் என் கட்சிக்காரர் (எடப்பாடி சுரேஷ்) எவ்விதத்தில் கழகக் கட்டுப்பாட்டை மீறினார் என்றும், அவப்பெயரை உண்டாக்கினார் என்றும் கூறவில்லை. மேலும் தனிப்பட்ட முறையிலும் அவருக்கு விளக்கமாக எவ்விதமான அறிவிப்பையும் அனுப்பவில்லை.

கழக விதிகள் 35 உட்பிரிவு 12இன்படி, பொதுச் செயலாளருக்குத்தான் ஒரு தொண்டரை நீக்குவதற்கான அதிகாரம் உள்ளது. தங்கள் இருவருக்கும் அதிகாரம் இல்லை. எனவே இந்த அறிவிப்பு கிடைத்த 15 தினங்களுக்குள் ஜூலை 5 - 2021 அன்று எடப்பாடி சுரேஷை நீக்கியதாக கூறப்பட்ட அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில் தகுந்த நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதை பின்பற்றி எடப்பாடி, பன்னீர்செல்வத்தால் நீக்கப்பட்ட பலரும் பன்னீருக்கும், எடப்பாடிக்கும் நோட்டீஸ் அனுப்பத் தயாராகிறார்கள் என்பது அதிமுகவில் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com