
போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப் பொருள் வழக்கில், கடந்த மாதம் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள், நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, ஸ்ரீகாந்த் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்தியன், ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்தியதாக, வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முதல் எதிரி பிரதீப் குமார் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து போதைப்பொருள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என வாதிட்டார்.
நடிகர் கிருஷ்ணா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இன்பண்ட் தினேஷ், போலீசார் அனுப்பிய சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜரான நிலையில் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது குறித்த தகவல் மட்டுமே தெரிவிக்கப்பட்டது. கைதுக்கான காரணங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. அவரிடம் நடத்திய மருத்துவ பரிசோதனையில், போதைப் பொருள் பயன்படுத்தியது நிரூபிக்கப்படவில்லை என வாதிட்டார்.
இதையடுத்து, இருவரும் எவ்வளவு போதைப் பொருட்களை வாங்கினர் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் நிர்வாகியான பிரசாத்திடம் நடத்திய விசாரணையில் போதை பொருள் புழக்கம் குறித்து தெரிய வந்ததாகவும், அவரது ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், முதல் எதிரி பிரவீன் குமாரும், அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் ஸ்ரீகாந்த் ஜூன் 23 ம் தேதியும், கிருஷ்ணா ஜூன் 26 ம் தேதி கைது செய்யப்பட்டனர் என்றார்.
அப்போது ஸ்ரீகாந்த் தரப்பு வழக்கறிஞர், வீட்டில் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த போது காவல் துறையினர் கைது செய்ததாக தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி நிர்மல்குமார் அறிவித்தார்.
இன்று தீர்ப்பளித்த நீதிபதி நிர்மல்குமார், போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த்,கிருஷ்ணாவிற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும், 10ஆயிரம் ரூபாய்கான சொந்த ஜாமீனிலும், அதே தொகைகான இரு நபர் ஜாமீனிலும் விடுதலை செய்து உத்தரவிட்ட நீதிபதி, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வழக்கின் புலன் விசாரணை அதிகாரி முன் தினமும் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.