வீட்டை எழுதித் தருமாறு கொலை மிரட்டல்... மதுரை துணை மேயர் மீது மூதாட்டி பகீர் புகார்...
மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த் புரம் 2-வது மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி வசந்தா. இவருக்கு ஒரு மகன் மற்றும் 5 மகள்கள் என மொத்தம் 6 பிள்ளைகள் உண்டு. இவரது மகன் முருகானந்தம் என்பவர் அதே பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மகன் முருகானந்தத்துடன் சென்ற வசந்தா, அதிரடி புகார் ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில் மதுரை மாநகராட்சி துணை மேயராக இருக்கும் நாகராஜன் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தனது வீட்டை மிரட்டி கேட்பதாக தெரிவித்திருந்தார்.
(பேட்டி)
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த குமார் என்பவரிடம் வசந்தா, அவரது வீட்டை அடகு வைத்து 10 லட்ச ரூபாய் கடனாக பெற்றிருந்தார்.
இதற்கான பணத்தை வட்டியுடன் திருப்பிக் கொடுப்பதற்கு தயாரான வசந்தா, அடமான பத்திரத்தை ரத்து செய்து கொடுக்குமாறு கூறியுள்ளார்.
இதற்கு குமார், தான் கூடுதலாக 15 லட்ச ரூபாய் தருகிறேன். அதற்கு பதிலாக வீட்டை கிரையம் செய்து தந்து விடுங்கள் என கறாராக கேட்டுள்ளார். இதனால் குழப்பமடைந்த வசந்தா, மகன் முருகானந்தத்தை அழைத்துச் சென்று நியாயம் கேட்டார்.
அப்போது குமாருக்கு கணேசன் மற்றும் புரோக்கர் முத்து ஆகியோர் ஆதரவாக பேசியதுடன் வசந்தாவை மிரட்டியுள்ளனர். இதுகுறித்து ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையத்துக்கு சென்ற வசந்தா, குமார், கணேசன், முத்து ஆகியோர் மீது புகார் அளித்தார்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ஜூலை 30-ம் தேதி மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் அவரது சகோதரர் ராஜேந்திரன் மற்றும் புரோக்கர் முத்துவுடன் வசந்தா வீட்டுக்கு சென்றனர்.
வீட்டை சொன்ன விலைக்கு தரவில்லை என்றால் குடும்பத்தோடு எரித்துக் கொன்று விடுவதாக மிரட்டியவர்கள், துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களை நோக்கி, இவர்களை சுட்டுத் தள்ளுங்கள் என்றும் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது..
இதனால் பயந்து போன வசந்தா, நடந்த விவரங்களை கடிதமாக எழுதி, அதனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று புகாராக கொடுத்தார். இது தொடர்பாக சிசிடிவி காட்சி ஒன்றையும் ஆதாரமாக வெளியிட்டார்.
மேலும் வசந்தாவின் மகன் முருகானந்தத்திடம் கால்களை உடைத்து விடுவதாகவும், தலையில் கல்லைப் போட்டு கொன்று விடுவதாகவும் மிரட்டியிருக்கின்றனர். இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை கிளப்பிய நிலையில், இதற்கு துணை மேயர் நாகராஜன் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தன் மீது பொய்யான புகார்களை அடுக்குவதாகவும், தான் கொலை மிரட்டல் விடுக்கவே இல்லை என்றும் கூறினார். அதோடு முருகானந்தம், தன் கட்சிக் கொடிக் கம்பத்தில் எச்சில் துப்பிக் கொண்டே இருந்ததாகவும், இதனை கேட்டதற்கு தன் மீது அபாண்ட பழி போடுவதாகவும் தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாகராஜன் மீது சமீப காலமாக அடுத்தடுத்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் மூதாட்டியின் சொத்துக்களை அபகரிக்கும் புகாரில் துணை மேயரின் பெயர் அடிபடுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே நெல்லை மற்றும் கோவையில் மேயர் பதவிகளில் சர்ச்சைகள் ஏற்பட்டு வரும் நிலையில் மதுரை மாநகராட்சியிலும் மாற்றங்கள் ஏற்படுமோ? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.
மாலைமுரசு செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் மதிவாணன்.