தோல்வியுற்றதா காங்கிரஸ் அரசாங்க நீதித்துறை!!!!!வெற்றி பெறுமா மோடி அரசாங்க நீதித்துறை!!!!!

தோல்வியுற்றதா காங்கிரஸ் அரசாங்க நீதித்துறை!!!!!வெற்றி பெறுமா மோடி அரசாங்க நீதித்துறை!!!!!
Published on
Updated on
6 min read

இந்திய விடுதலைக்குப்பிறகு இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது முதல், ஆங்கில ஆட்சியினால் ஏற்பட்ட பின்தங்கிய நிலையிலிருந்து மீண்டு வருவதற்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தது. ஏற்ற நிலையிலேயே இருந்த காங்கிரஸ் கட்சி இந்திரா காந்தியின் ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்ட எமர்ஜென்சியை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சரிவை சந்திக்க தொடங்கியது.  

காங்கிரஸ் முதல் முறையாக 1977ல் நடந்த பொது தேர்தலில் தோல்வியை சந்தித்தது.  அதன் பின்னர் வெற்றி பெற்றாலும் வாக்கு விகிதம் குறைந்து கொண்டே சென்றது.  சில தேர்தல்களில் கூட்டணி கட்சிகளின் உதவியுடனே ஆட்சி அமைத்தது காங்கிரஸ். 1998 தேர்தலுக்கு பிறகு பாஜக அதிக அளவில் மக்கள் செல்வாக்கு பெற தொடங்கியது. 1999 தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

நாடாளுமன்றத்தில் மக்களவை 543 உறுப்பினர்களை கொண்டுள்ளது.  எதிர்கட்சியாக பொறுப்பேற்க குறைந்தபட்சம் 55 இடங்களையாவது பெற வேண்டும்.  ஆனால் காங்கிரஸ் 2014 பொது தேர்தலில் 44 இடங்களையும் 2019 பொது தேர்தலில் 52 இடங்களையும் பெற்று எதிர்கட்சியாகும் வாய்ப்பையும் இழந்தது.

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக 2014 தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.  அதனை தொடர்ந்து நடைபெற்ற 2019 பொது தேர்தலிலும் பாஜகவே வெற்றி பெற்றது.

காங்கிரஸ் ஆட்சியின் கடைசி நீதிபதி:

இந்தியாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகளை கொண்ட கொலிஜியம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த அமைப்பு மூலமாகவே நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமனம் செய்யப்படுகின்றனர்.  காங்கிரஸ் ஆட்சியில் நியமனம் செய்யப்பட்ட கொலிஜியத்தின் அனைத்து நீதிபதிகளும் முன்னரே ஓய்வு பெற்ற நிலையில் கடைசி நீதிபதியான என். வி. ரமணாவும் நேற்று ஓய்வு பெற்றுள்ளார்.  தற்போது கொலிஜியம் அமைப்பில் உள்ள அனைத்து நீதிபதிகளும் 2014 பொதுதேர்தலுக்கு பிறகு நியமனம் செய்யப்பட்டவர்கள்.

மோடி ஆட்சியில் 

தலைமை நீதிபதிகளால் நிலுவையில் வைக்கப்பட்டிருக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 6 வழக்குகளும், நீதிபதிகள் அமர்வு மூலம் விசாரிக்கப்பட வேண்டிய மறு ஆய்வு தேவைப்படும் 53 வழக்குகளும் இன்றளவும் நிலுவையிலேயே உள்ளன. 

இந்த 53 சவால் நிறைந்த வழக்குகளும் ரமணாவிற்கு முந்தைய நீதிபதிகளால் செய்யப்பட்டதைப் போன்று இன்றளவும் நிலுவையிலேயே உள்ளன. ஆய்வு தரவுகளின் படி சில வழக்குகளில் மட்டுமே சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இங்கு நமது விவாதத்திற்காக ஆறு வழக்குகளைக் குறித்தும் அவற்றின் தற்போதைய நிலை குறித்தும் ஆராயலாம்.

1.  ஜம்மு காஷ்மீரின் 370வது சட்டப்பிரிவு ரத்து(1,115 நாட்களாக நிலுவையில் உள்ளது)

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு , காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி நீக்கியது.

ஜம்மு-காஷ்மீருக்கான 370ஆவது சட்டப்பிரிவு நீக்கம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும், சர்ச்சைகளும் அப்போது ஏற்பட்ட நிலையில், மத்திய அரசின் சார்பில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால், சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பின்னர் அதாவது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் வகையில் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பிறகு ஜம்மு-காஷ்மீரில் அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு ஆகியன வலுவான நிலையை அடைந்திருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.

மனோகர் லால் Vs யூனியன் ஆஃப் இந்தியா:

ஒரு மாநிலத்தின் தரநிலையை யூனியன் பிரதேசமாக குறைப்பது அரசியலமைப்பிற்கு முரணானது எனக் கூறிய ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் மாநிலத்தின் அரசியலமைப்பு அவையின் ஒப்புதல் இல்லாமல் சட்டப்பிரிவு 370ஐ திருத்த முடியாது என நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.  ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட துணைநிலை ஆளுநரால் திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தலைவரின் உத்தரவின்படி, ஆகஸ்டு 5,6 ஆகிய தேதிகளில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019ன் படி இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவில்லை. இன்று வரை வழக்கு நிலுவையில் உள்ளது.

2.  அரசியல் நிதியை ஊக்குவிப்பதற்கு ஆதரவான தேர்தல் நிதி பத்திரங்களுக்கான வழக்கு (1,816 நாட்களாக நிலுவையில் உள்ளது)

2017 யூனியன் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, தேர்தல் பத்திரங்கள் என்பது அரசியல் கட்சிகளுக்கு பெயரை வெளிப்படுத்தாமல் பணத்தை நன்கொடையாகப் வழங்கும் ஒரு வட்டி இல்லாத பத்திர திட்டமாகும். மேலும் அந்த பத்திரத்தில் நன்கொடையாளர் பெயர் பற்றிய எந்த தகவலும் இருக்காது. எனவே, குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு யாரிடம் இருந்து நன்கொடை பெற்றோம் என்பது தெரியாது. எனவே, பத்திரத்தை வாங்கிய பிறகு அந்த குறிப்பிட்ட அரசியல் கட்சியே அதன் உரிமையாளராக கருதப்படுகிறது. தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் பெறும் நிதிக்கு அரசியல் கட்சிகள் வருமான வரி விலக்கும் பெற முடியும். இந்த பத்திரங்கள் ரூ .1,000, ரூ. 10,000, ரூ. 1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி என விற்கப்படுகின்றன.

அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ் Vs யூனியன் ஆஃப் இந்தியா :

தேர்தல் பத்திரங்கள்  மீதான அரசியல் நிதியுதவி ஜனநாயகத்திற்கு கேடு விளைவிப்பதாகவும் பண மசோதாவாக நிறைவேற்றப்பட்டதால் சட்டவிரோதமானது என்றும் மனுதாரர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் இந்த திட்டத்தை "நன்கொடைகளின் வெளிப்படைத்தன்மையைப் பொறுத்தவரை இது ஒரு பிற்போக்கு நடவடிக்கை" என்று விவரித்தது மற்றும் அதை திரும்பப் பெற கோரிக்கை விடுத்தது.

வழக்கு இன்றுவரை விசாரணைக்கு எடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

3. அரசு கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு ஹிஜாப் அணிவதற்கு தடை:

கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் ஒரே சீரான சீருடை அணிந்துவர வேண்டும் என்று மாநில அரசு பிறப்பித்துள்ள உத்தரவு சரியானது,’ என்று ஹிஜாப் வழக்கில் கர்நாடக  உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை  விதித்தும், சீருடை அணிந்து வருவதை கட்டாயமாக்கியும் கடந்த பிப்ரவரி 5ம் தேதி கர்நாடகா அரசு உத்தரவு பிறப்பித்தது.

ஆகஸ்ட் 2 அன்று, மாநிலக் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு மாநில அரசு தடை விதித்துள்ள கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக ரமணா தலைமை அமர்வு விசாரணைக்கு ஒரு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.  இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு 159 நாட்கள் ஆகிவிட்டது.  வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

4.  பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு(1,323 நாட்களுக்கு நிலுவையில் உள்ளது:

பட்டியல் இனம், பழங்குடி அல்லது பிற்படுத்தப்பட்ட சாதி நிலைகள் மற்றும் பிற சமூக காரணிகளைக் கருத்தில் கொள்ளாமல், பொருளாதாரத்தின் அடிப்படையில் மட்டுமே அரசு வேலைகள் மற்றும் கல்விக்கான இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்பிற்கு எதிரானது என்பது மனுதாரர்களின் வாதம்.

பாராளுமன்றம் 103வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை 9 ஜனவரி 2019 அன்று, நிறைவேற்றியது.  இது அரசியலமைப்பின் 15 மற்றும் 16 வது பிரிவுகளில் திருத்தத்தை மேற்கொண்டது. பொருளாதாரம் அல்லது குடும்ப வருமானத்தின் அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கை மற்றும் அரசு வேலைகளில் 10% இடஒதுக்கீடு செய்ய மாநிலத்திற்கு இந்த சட்டதிருத்தம் அதிகாரம் அளித்தது. 

யூத் ஃபார் சமத்துவம் vs யூனியன் ஆஃப் இந்தியா:

பட்டியல்படுத்தப்பட்ட சாதியினர், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சாதியினரைத் தவிர்த்து உச்ச நீதிமன்றம் விதித்த 50% உச்சவரம்பு வரம்பை மீறும் சட்டத்தை எதிர்த்து 20 க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தற்போது வரை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

5.  சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம், 1967 (1,105 நாட்களாக நிலுவையில் உள்ளது)

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19-வது பிரிவு, பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், அமைப்பாகும் சுதந்திரம், ஒன்று கூடுதல் என்ற அடிப்படை உரிமைகளை இந்திய குடிமக்களுக்கு வழங்கியுள்ளது. 

இந்தச் சட்டத்தின் பிரிவு 35-ன் படி அரசு நினைத்தால் எந்த ஒரு இயக்கத்தையும் தீவிரவாத இயக்கம் என்று அறிவிக்க முடியும். அவ்வாறு அறிவித்தால், அந்த இயக்கத்தில் அதுவரை உறுப்பினர்களாக இருந்த அனைவரும், தீவிரவாதிகளாகவே கருதப்படுவார்கள்.

அரசால் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் ஆதரவாளராக இருந்தாலோ, அந்த இயக்கத்தின் வெளியீடுகளை வீட்டில் வைத்திருந்தாலோ கூட இந்தச் சட்டத்தின் கீழ் ஒருவரை கைதுசெய்ய முடியும்.

இந்தச் சட்டத்தின் பிரிவு 43-ன் படி, குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு அதிகபட்சமாக 30 நாட்கள் வரை போலீஸ் காவல் வழங்க முடியும். அதிகபட்சமாக ஒரு நபரை 90 நாட்கள் வரை எவ்வித விசாரணையுமின்றி நீதிமன்ற காவலில் வைக்க முடியும். அதேபோல், 180 நாட்கள் வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் ஒருவரை சிறையில் அடைத்து வைத்திருக்க முடியும்.

இந்தச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நபர், எந்த நீதிமன்றத்திலும் முன்ஜாமீன் பெற முடியாது. அதேபோல் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர் பிரிவு 43-ன் படி, ஜாமீனில் வெளியே வருவது இயலாத காரியம். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் அதற்காக அமைக்கப்படும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவார்கள். இந்த நீதிமன்ற நடவடிக்கையை பொதுமக்களோ, பத்திரிகையாளர்களோ பார்ப்பதற்கு அனுமதியில்லை.

சஜல் அவஸ்தி vs யூனியன் ஆஃப் இந்தியா:

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஆதாரத்திற்கான சுமையை அதிக அளவில் ஏற்றுகிறது என்றும் இது அரசியலமைப்பு விதிகளை மீறுகிறது என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

 'பயங்கரவாதச் சட்டம்' என்பதன் வரையறையை விரிவுபடுத்தும் மற்றும் யாரையும் அவ்வாறு முத்திரை குத்துவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் அளித்த சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய வேண்டுமா என்பதைத் தீர்மானிக்குமாறு உச்ச நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டது. மேலும் விசாரணை அல்லது ஆதாரம் இல்லாமல் ஒருவரை 'பயங்கரவாதி' என தீர்மானிப்பது அரசியலமைப்பின் பிரிவு 19(1)(a)-ன் படி பேச்சு சுதந்திரத்தை மீறுவதாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இன்று வரை வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படாமல் நிலுவையிலேயே உள்ளது.

6.  குடியுரிமை திருத்த சட்டம்,2019.  அண்டை நாடுகளை சேர்ந்த முஸ்லீம் அல்லாதவர்களுக்கு மட்டும் விரைவான குடியுரிமை (987 நாட்களாக நிலுவையில் உள்ளது)

பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் டிசம்பரில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை இயற்றியது.ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்த சட்டம் விரைவான குடியுரிமை வழங்குகிறது. இதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பெரிய அளவிலான போராட்டங்கள் வெடித்தன. அரசு இதுவரை சரியான விதிகளை வகுக்காததால், சட்டம் இதுவரை அமல்படுத்தப்படவில்லை.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் Vs யூனியன் ஆஃப் இந்தியா:

அசாமில் வரையறுக்கப்பட்ட சட்டத்திற்கு தடை கோரிய மற்றொரு மனு 20 மே 2020 அன்று, தலைமை நீதிபதி பாப்டேயின் அமர்வு மூலம் விசாரணைக்கு வந்தது. ஆனால் அந்த அமர்வு சட்டத்திற்கு தடை விதிக்காமல், மத்திய அரசுக்கு நோட்டீஸ் மட்டும் அனுப்பியது.

2019 இல் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் பாரபட்சமானது என்றும், அது மதம் சார்ந்தது என்றும், 21வது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள வாழ்க்கைக்கான அடிப்படைஉரிமையை மீறுவதாகவும் உள்ளது என மனுதாரர்கள் கூறியுள்ளனர். எனவே இது அரசியலமைப்பிற்கு முரணானது என்னும் வாதத்தை முன் வைத்துள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் நிலுவை வழக்குகள்:

ஆகஸ்ட் 2, 2022 நிலவரப்படி, இந்திய உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 71,411 ஆகும், அவற்றில் 56,365 சிவில் வழக்குகள் மற்றும் 15,076 வழக்குகள் குற்றவியல் வழக்குகள்.

இந்த வழக்குகளில், 10,491 க்கும் மேற்பட்ட வழக்குகள் பத்து வருடங்களுக்கு மேலாக தீர்ப்புக்காக காத்திருக்கின்றன. 

வலுவாக செயல்படுமா உச்சநீதிமன்றம் :

உச்சநீதிமன்றத்தில் கொலிஜியம் அமைப்பில் உள்ள அனைத்து நீதிபதிகளும் பாஜக ஆட்சியில் நியமனம் செய்யப்பட்டவர்கள்.  இதற்கு முன்னரே உச்சநீதிமன்றத்தின் பல முடிவுகள் மத்திய அரசாலேயே எடுக்கப்பட்டு வந்தது.  சிறப்பு அந்தஸ்து சட்டம் , உஃபா சட்டம், அமலாக்க துறை வழக்குகள் வரை அனைத்துமே மத்திய அரசினால் கொண்டு வரப்பட்டவை.  அவற்றை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையிலேயே உள்ளன.

பாஜக ஆட்சியில் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் அரசியலமைப்பு சட்டத்திற்கு பாதுகாவலாக இருப்பார்களா? இல்லை மத்திய அரசின் பொம்மையாக மாற்றப்படுவார்களா? என்ற கேள்வி மக்களிடையே வலுவாக எழுந்துள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com