மல்யுத்த போட்டி தொடர்பான திரைப்படம் என்றவுடன் சினிமா பிரியர்கள் பலருக்கும் நினைவுக்கு வருவது தங்கல் திரைப்படம். 2016-ம் ஆண்டு அமீர்கான் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை புரிந்தது.
மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைப்பதையே கனவாக வைத்திருக்கும் அமீர்கானுக்கு ஆசை கனவாகவே போகிறது. இதனால் தன் ஆசையை தனது மகள்களை வைத்து சாதிக்க முடிவெடுப்பவர், கடுமையான பயிற்சியளித்து வெற்றியும் பெற வைக்கிறார்.
இந்த படத்திற்கும், ஒலிம்பிக்கில் மல்யுத்தப் போட்டியில் இறுதிப் போட்டி வரை சென்று தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் வினேஷ் போகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
மல்யுத்த வீராங்கனைகளான கீதா, பபிதாவின் உண்மைக் கதைதான் தங்கல் திரைப்படம். இந்த கீதா, பபிதா ஆகியோரின் நெருங்கிய உறவினர்தான் வினேஷ் போகத்.
மேலும் வினேஷ் போகத்தின் தந்தை ராஜ்பால் போகத்தும் மல்யுத்த வீரர் ஆவார். அதோடு வினேஷின் கணவர் சோம்வீரர் ராதேவும் மல்யுத்தப் போட்டியில் தேசியளவில் பங்கேற்று சாம்பியன் ஆவார்.
ஆக, வினேஷ் போகத்தின் குடும்பமே மல்யுத்த குடும்பமாய் திகழ்ந்தது. அரியானா மாநிலம் பலாலி என்ற சிற்றூரில் பிறந்த வினேஷ் போகத், சிறு வயதில் மல்யுத்த போட்டியில் பங்கேற்பதற்கு பல்வேறு எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியதிருந்தது.
அவரது உறவினர்கள் பலரும், மல்யுத்தப் போட்டியில் ஈடுபடுவது, தங்கள் சமூகத்திற்கும் மரபுக்கும் எதிரானது என குற்றம் சாட்டினார். ஆனால் எல்லா தடைகளையும் மீறி மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்டு சாதனைகளை நிகழ்த்தினார்.
2013-ம் ஆண்டு டெல்லியில் நடந்த ஆசிய மல்யுத்த சாம்பியன் போட்டியில் பெண்களுக்கான 52 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றார். பின்னர் தென்னாப்பிரிக்காவில் 51 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம், 2014-ல் 48 கிலோ எடைப் பிரிவில் தங்கதப்பதக்கம், அதே ஆண்டு ஆசியாவில் 48 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் என பதக்கங்களை வாரிக் குவித்தார்.
வினேஷ் போகத் வழக்கமாக 52 கிலோ எடைப் பிரிவிலேயே போட்டியிட்டு வந்தார். ஆனால் கடந்த ஆண்டு காலில் அறுவை சிகிச்சை செய்ததன் காரணமாக உடல் எடையை குறைத்தார்.
நடப்பாண்டு ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற வினேஷ் போகத், ஒரே நாளில் காலிறுதி, அரையிறுதிப் போட்டிகளில் பங்கேற்று வெற்றியும் பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
ஆனால் வினேஷின் உடல் எடை 50 கிலோவாக இருப்பதற்கு பதிலாக 50 கிலோ 100 கிராமாக இருந்தது. விதிகளை மீறி கூடுதலாக 100 கிராம் எடை கூடியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் வினேஷ் போகத்.
மல்யுத்தப் போட்டியில் வெற்றி பெற்றால் தங்கம், வெற்றி பெறவில்லை என்றால் வெள்ளிப் பதக்கம் பெற இருந்த நிலையில் கமிட்டியால் தகுதி நீக்கம் செய்யப்பட்டது இந்திய மக்களை அதிர்ச்சியடைய வைத்தது.
கடந்த ஆண்டு பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் புகார் வைத்த வினேஷ் போகத் உள்ளிட்ட வீராங்கனைகள் ஜந்தர் மந்தரில் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்த நிலையில் தற்போது வினேஷ் போகத் மீது ஒட்டு மொத்த இந்தியர்களின் பார்வையும் விழுந்தது.
அதே நேரம், தான் தகுதி நீக்கம் செய்யப்படுவதை முன்பே வினேஷ் அறிந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதற்காக ஆகஸ்ட் 6-ம் தேதி மாலை வரையிலும் வினேஷின் உடல் எடை 50 கிலோ 150 கிராமாக இருந்திருக்கிறது. மறுநாள் எப்படியும் தன்னை தகுதிநீக்கம் செய்து விடுவார்கள் என்பதை உணர்ந்தவர், இரவில் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டார்.
உணவு கூட உட்கொள்ளாமல், சைக்ளிங், ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட பயிற்சிகளில் ஈடுபட்டவர் நீராவிக்குளியல் போட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் வினேஷின் உடல் எடை 50 கிராம் வரை குறைந்தது. ஆனால் மேலும் பயிற்சி எடுக்க முடியாமல் தவித்தவர், மறுநாள் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
தற்போது நீச்சத்துக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வினேஷ் போகத்துக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தங்கப்பதக்கம் வெல்வதற்கு வினேஷ் போகத் காத்திருந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது மக்களை சோகமடைய வைத்துள்ளது.