சசிகலாவை ஓரம் கட்ட எடப்பாடியின் அதிரடி திட்டம்,..வடக்கும் தெற்குமாக பிரியும் அதிமுக.! 

சசிகலாவை ஓரம் கட்ட எடப்பாடியின் அதிரடி திட்டம்,..வடக்கும் தெற்குமாக பிரியும் அதிமுக.! 

தமிழக அரசியலில் உள்கட்சி மோதல்கள் ஒன்றும் புதிது அல்ல. ராஜாஜி-காமராசர், கருணாநிதி- எம்.ஜி.ஆர், ஜெயலலிதா-ஜானகி, கலைஞர்-வைகோ என்று  பல அரசியல் மோதல்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், தற்போது முதன்முறையாக அதிமுகவை கைப்பற்ற மூன்று அணிகளுக்கு இடையே மோதல் நடந்து வருகிறது. அதுவும் வெளிப்படையாகவே.! 

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்துவிட்டு சிறையில் இருந்து வெளிவந்ததும் இனி சசிகலா அரசியலில் தீவிரமாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமைதியாக இருந்த அவர் தேர்தலை ஒட்டி அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என்று அறிவித்தார். சசிகலா ஒதுங்கிவிட்டதால் இனி அதிமுகவில் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் மோதல் மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் ஆடியோக்கள் மூலம் தன் அரசியல் வருகையை அறிவித்திருக்கிறார் சசிகலா.

அந்த ஆடியோக்களில் தொண்டர்களிடம் தொலைபேசியில் பேசிய சசிகலா, அதன் பின் முன்னாள் எம்.எல்.ஏவிடமும் பேசினார். மேலும் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் சசிகலாவுக்கு நல்ல ஆதரவும் கிடைத்துள்ளது. இந்த தகவல் எடப்பாடியை சென்றடைந்ததும் கொதிப்படைந்த எடப்பாடி கே.பி.முனுசாமி மூலம் சசிகலாவுக்கு பதிலடி கொடுக்கச்சொல்லியுள்ளார். அதன் படி முனுசாமியும் "சசிகலாவை எந்த அதிமுக தொண்டனும் ஆதரிக்க மாட்டான். அவர் அமமுகவினருடன் தான் தொடர்பில் இருக்கிறார்" என்று கூறியுள்ளார். 

அதன்பின் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் "கருவாடு கூட மீன் ஆகலாம்.. ஆனால், சசிகலா அதிமுகவில் வர முடியாது" எனக் கூறினார். இதோடு நிற்காமல் கொரோனா முடிந்த பின் சசிகலா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லும் முன் தான் சுற்றுப்பயணம் செல்ல முடிவெடுத்துள்ளார் எடப்பாடி. இதன் மூலம் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகள் சசிகலா பக்கம் செல்லாமல் தடுக்க முடியும் என்று நினைக்கிறாம்.

அதோடு இந்த பயணத்துக்கு பன்னீர் செல்வத்தையும் உடன் அழைத்து செல்ல விரும்பியுள்ளார் எடப்பாடி. ஆனால் இதற்கு பன்னீர் செல்வம் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சசிகலா அதிமுகவுக்கு வருவதை வட தமிழகமே விரும்பவில்லை என்ற கருத்தையும் ஏற்படுத்த எடப்பாடி முயல்வதாக கூறப்படுகிறது. இதை எல்லாம் தாண்டி சசிகலா அதிமுகவை கைப்பற்றுவது அத்தனை எளிதாக இருக்காது என்பதே தற்போது உள்ள நிலைமை என்கிறார்கள் அதிமுகவினர்.  

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com