இபிஎஸ் ஓபிஎஸ் கடைசி நிமிட காத்திருப்பு...விடிந்தால் விடியல் யாருக்கு?

இபிஎஸ் ஓபிஎஸ் கடைசி நிமிட காத்திருப்பு...விடிந்தால் விடியல் யாருக்கு?
Published on
Updated on
2 min read

அதிமுக பொதுக்குழு கூட்டம்:

அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம் எழுந்ததையடுத்து கட்சி இரண்டாக விரிசல் அடைந்தது. இந்த விவகாரத்தில் ஈ.பி.எஸ் பொதுக்குழு கூட்டம் என்ற ஒரு ஆயுதத்தை ஓ.பி.எஸ்க்கு எதிராக கையில் எடுத்தார். இதனையடுத்து சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுக்குழுவுக்கு தடைக்கோரி ஓ.பி.எஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர்  வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பொதுக்குழு நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என்று அறிவித்து உத்தரவு பிறப்பித்தார். நீதிபதியின் உத்தரவை தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடத்தி ஈ.பி.எஸ் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார். 

பொதுக்குழு தொடர்பான வழக்கு:

கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில்,  சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பொதுக்குழு தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்கும் எனவும், இந்த வழக்கை விசாரிக்கும் தனி நீதிபதி வழக்கை இரண்டு வாரத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

மீண்டும் உயர்நீதிமன்றம் வந்த வழக்கு:

உச்சநீதிமன்ற நீதிபதி உத்தரவை அடுத்து, பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கு மீண்டும் கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வர இருந்தது. ஆனால், இதற்கிடையில் இந்த வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து சார்பில் தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரியிடம் மனு அளிக்கப்பட்டது.

பொதுக்குழு வழக்கில் நீதிபதி மாற்றம்:

இந்த மனு தொடர்பாக ஓ.பி.எஸ் தரப்பிடம் கேள்வி எழுப்பிய தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, 2 நாட்களுக்கு முன்பே என்னிடம் கூறியிருந்தால் நானே வழக்கில் இருந்து விலகியிருப்பேன் என்று கூறிவிட்டு, வழக்கில் இருந்து விலகினார். இதையடுத்து பொதுக்குழுவுக்கு தடைக்கோரி ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்குக்கு ஜி.ஜெயச்சந்திரனை நீதிபதியாக அறிவித்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
 
தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு:

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தலைமையில் விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதி முன்பு இரு தரப்பினரும் தங்களது வாதங்களை முன் வைத்தனர். இதையடுத்து, வழக்கில் விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில், நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். 

நாளை தீர்ப்பு:

இந்நிலையில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைக்கோரி ஓ.பி.எஸ் மற்றும் வைரமுத்து தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நாளை தீர்ப்பளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளைய தீர்ப்பானது யாருக்கு?:

பொதுக்குழுவுக்கு தடைக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவிருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து, தீர்ப்பு ஓ.பி.எஸ்? அல்லது ஈ.பி.எஸ்? யாருக்கு சாதகமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது. அதுமட்டுமல்லாமல், நாளைய தீர்ப்பில் கடந்த ஜுலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் செல்லுமா? என்பது குறித்தும் தீர்ப்பில் வெளியாகும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. நீதிமன்றத்தில் தொடர் வெற்றி முகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ஈ.பி.எஸ் இந்த வழக்கிலும் ஏறு முகத்தை காண்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்....

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com