
2021ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் முடிவு வெளியானது சுமார் 10 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த அதிமுக ஆட்சியை இழந்தாலும் பலமான எதிர்கட்சியாக உருவெடுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி முதல்வரான போது கட்சி உடைந்துவிடும் அதிமுக காணாமல் போய்விடும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போதைய இந்த நிலைக்கு எடப்பாடி பழனிசாமியே காரணம் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக ஜெயலலிதா மறைவுக்கு பின், ஒ.பன்னீர்செல்வம் தர்மயுத்தத்தை நோக்கி செல்ல, கட்சியை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த மன்னார்குடி குடும்பத்தையும் வெளியேற்றி, கட்சியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார் எடப்பாடி பழனிசாமி. இவரது ஆட்சியில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், அவருக்கு எதிராக எதிர்ப்புகள் வராத வண்ணம் பணியாற்றி இருந்தார்.
அதேவேளையில் ஜெயலலிதாவால் இரு முறை முதல்வராக அறிவிக்கப்பட்டிருந்த ஒ.பன்னீர்செல்வம் ஒரு பக்கம் கட்சிக்குள் அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்திக்கொண்டு தான் இருந்தார். தேர்தலில் தோல்வியடைந்த பிறகும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு ஒ.பன்னீர்செல்வம் போட்டி போட்டாலும், எல்லா தடைகளையும் தாண்டி எடப்பாடி. எதிர்க்கட்சி தலைவரானார். இப்படி, அதிமுகவில் மேலும், மேலும் முன்னேறி சென்று கொண்டிருக்கிறார் எடப்பாடி
ஆனால், ஒ.பன்னீர்செல்வத்துக்கு இருக்கிற ஒரே பிடிமானம், அவர் அதிமுகவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பதுதான். ஒ.எடப்பாடிசெல்வமும் இதை வைத்துக்கொண்டு கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்று செயல்படுகிறார். என்ன தான் எடப்பாடி பல சந்தர்ப்பங்களில் பன்னீரை வீழ்த்தினாலும் மறுபடி மறுபடி அவரை சந்திக்க காரணம் பன்னீர் வசமிருக்கும் அந்த ஒருங்கிணைப்பாளர் பதவி தான்.
இதை வைத்தே எடப்பாடிக்கு செக் வைத்துள்ளார் பன்னீர் செல்வம். எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுக்கொடுத்ததும் அடுத்ததாக சட்டமன்றத்தில் வலிமைவாய்ந்த பதவியாக இருக்கும் கட்சி கொறடா பதவியை கைப்பற்ற முயன்று வருகிறாராம் பன்னீர். இந்த பதவியை அடைந்து விட்டால் சட்டமன்றத்தில் தன் பவர் அதிகரித்துவிடும் என்று நினைக்கிறாராம்.
ஆனால் அதே கொறடா பதவிக்கு கே.பி.முனுசாமியை கொண்டு வர நினைக்கிறார் எடப்பாடி என்று சொல்லப்படுகிறது. இதுவரை முனிசாமி பன்னீர், எடப்பாடி என இரண்டு பக்கமும் முழுமையாக வரவில்லை. ஆகவே அவருக்கு கொறடா பதவியை கொடுத்து அவரை முழுவதுமாக தன் பக்கம் இழுக்க முயன்று வருகிறார் எடப்பாடி என்று அவர் தரப்பில் கூறப்படுகிறது.