தப்பித்த கயல்விழி, தவறவிட்ட தமிழரசி!

தப்பித்த கயல்விழி, தவறவிட்ட தமிழரசி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சர்கள் கடந்த சில மாதங்களாகவே, தொடர் சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள். இதனால் திமுக ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவுற்றதையொட்டி, தமிழ்நாட்டு அமைச்சரவையில் அதிரடி மாற்றம் நிகழலாம் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. இதில் சில அமைச்சர்கள் பதவியை இழக்க நேரிடலாம் என்ற எதிர்பார்ப்பும் அப்போது நிலவியது. அதில் தற்போதைய ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக உள்ள கயல்விழி செல்வராஜின் பெயரும் அடிபட்டது.

தற்போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக உள்ள கயல்விழி செல்வராஜ் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது தாராபுரம் தொகுதியில் அப்போதைய பாஜக மாநில தலைவராக இருந்த எல்.முருகனை தோற்கடித்தார். இதனால் திமுகவில் முக்கியத்துவமான இடத்தை அடைந்தார். 2021 ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சில காலமாக சிறப்பாக செயல்படவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக வேங்கைவயல் பிரச்சினையில்  ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்ற முறையில் பொறுப்பெடுத்து குறிப்பிடத்தகுந்த நடவடிக்கைகள் எதையும் அவர் எடுக்கவில்லை என தெரிகிறது. வேங்கைவயல் கிராமத்திற்கு சென்று மக்களை சந்திப்பதையோ அவர்களுக்கு ஆறுதல் கூறுவதையோ செய்யாமல் தவிர்த்திருக்கிறார் கயல்விழி செல்வராஜ். இது அப்பிரச்சினை பூதாகரமான வடிவம் எடுப்பதற்கு மேலும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் கயல்விழி செல்வராஜ் அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அப்போது நிலவியது.

இந்நிலையில் கயல்விழி செல்வராஜ் அமைச்சர் பதவியில் இருந்து இறக்கபட்டால், சங்கரன்கோயில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ராஜாவிற்கு அப்பதவி வழங்கப்படலாம் என்ற பேச்சும் அடிபட்டது. அதேவேளையில் அமைச்சரவையில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் இரண்டிலிருந்து ஒன்றாக குறையக் கூடும் என்பதால் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினரான தமிழரசிக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது. தமிழரசியின் செயல்பாடுகளும் அதற்கு ஏற்றவாறே அமைந்திருந்தன. ஏற்கனவே 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த அனுபவமும் இவருக்கு கைக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஏற்கனவே  சிவகங்கை மாவட்டத்தில் பெரிய கருப்பன் அமைச்சராக உள்ள நிலையில் வெறும் 4 சட்டமன்ற தொகுதிகளே உள்ள சிறிய மாவட்டத்திலிருந்து இரண்டாவது அமைச்சரா? என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் கடந்த வாரம்  அமைச்சரவை மாற்றம் தொடர்பாக வெளியான அறிக்கை இந்த யூகங்களுக்கு தற்காலிக முற்றுப்புள்ளியை வைத்துள்ளது. பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் மட்டும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் டிஆர்பி ராஜா புதிய அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். மற்ற அமைச்சர்களின் துறைகள் மட்டுமே மாற்றப்பட்டிருக்கிறது. நெடுங்காலம் ஸ்டாலினுடன் பயனித்த அமைச்சர் நாசர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது ஒருவிதத்தில் அனைவருக்குமான எச்சரிக்கை போலவே பார்க்கப் படுகிறது. எவ்வளவு செல்வாக்கான அமைச்சரும் கூட பதவியிலிருந்து நீக்கப்படலாம் கருத்தும் இதனால் நிலவுகிறது.

அதே நேரத்தில் தமிழரசி அமைச்சராக தேர்ந்தெடுக்கப்படாமல் போனதில் அமைச்சர் பெரியகருப்பனின் தலையீடும் அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் மூத்த அமைச்சர்கள் பலரும் முதலமைச்சரிடம் மீண்டும் ஒரு வாய்ப்பு கயல்விழிக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுகொண்டதாக கூறப்படுகிறது. 2021ல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஏற்கனவே ஒருமுறை அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளது. தற்போது நடந்து மாற்றம் இரண்டாவதாகுதம். இதில் பதவி இழக்க இருந்ததாக கணிக்கப்பட்ட கயல்விழி செல்வராஜ் தற்போது 'வைல்ட் கார்ட்' சுற்றை போல அமைச்சரவையில் தன்னை தக்க வைத்துள்ளார். அதேநேரத்தில் தமிழரசியோ அமைச்சர் பதவியை நோக்கி முன்னேறி வந்தாலும் முட்டுக்கட்டை போடுவதற்கு கட்சிக்குள்ளே நிறைய பேர் இருக்கின்றனர்.  இந்நிலையில் இந்த நல்வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தன்னை தக்க வைத்துக் கொள்வாரா கயல்விழி செல்வராஜ் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com