குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக மூன்று காங்கிரஸ் தலைவர்கள் விலகல்!

குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக மூன்று காங்கிரஸ் தலைவர்கள் விலகல்!
Published on
Updated on
1 min read

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், அக்கட்சியில் இருந்து விலகினார். கட்சியின் கட்டமைப்பை ராகுல் சீர்குலைத்து விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் இருந்து சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரசில் உள்ளார்.

காங்கிரஸில் முதன்மையான பதவிகள்

குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சி சார்பாக ஜம்மூ காஷ்மீர் முதலமைச்சர், இந்திய ஒன்றிய அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பதவிகள் வகித்துள்ளார். குலாம் நபி ஆசாத் திடீரென விலகியது அக்கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அவரை தொடர்ந்து அவரது சொந்த மாநிலமான ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 8 காங்கிரஸ் தலைவர்கள் அக்கட்சியை விட்டு விலகி விட்டனர். இவர்களில் முன்னாள் அமைச்சர்களும் அடங்கும்.

சட்டமன்ற தேர்தல்

எப்போது வேண்டுமானாலும் ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படலாம் என்பதால், விரைவில் அங்கு புதிய கட்சி தொடங்க உள்ளதாக குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். அதற்கான வேலைகளை அவர் முன்னெடுக்க தொடங்கியுள்ளார். காங்கிரசில் அதிருப்தியில் இருப்பவர்களை தன் பக்கம் இழுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவு

இந்நிலையில், குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கட்சியில் இருந்து மேலும் மூன்று தலைவர்கள் விலகி உள்ளனர். கதுவா மாவட்டம் பானி சட்டமன்ற தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் துணை சபாநாயகருமான குலாம் ஹைதர் மாலிக் மற்றும் முன்னாள் சட்டமேலவை உறுப்பினர்கள் சுபாஷ் குப்தா, ஷாம் லால் பகத் ஆகியோர் விலகியுள்ளனர். கட்சித் தலைமைக்கு பதவி விலகல் கடிதங்களை அனுப்பி உள்ளனர்.

முன்னாள் துணை முதலமைச்சர் தாரா சந்த், முன்னாள் அமைச்சர்கள் அப்துல் மஜித் வானி, மனோஹல் லால் சர்மா, குரு ராம் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பல்வான் சிங் ஆகியோரும் டெல்லியில் ஆசாத்தை சந்தித்தனர். அவர்கள் காங்கிரஸில் இருந்து விலகிய பின்னர் குலாம் நபி ஆசாத்துக்கான ஆதரவை முறைப்படி அறிவிப்பார்கள் என தெரிகிறது.


logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com