100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த ‘செல்ஃபி புள்ள’ - பத்திரமாக மீட்கப்பட்டது எப்படி?

100 அடி பள்ளத்தில்  தவறி விழுந்த ‘செல்ஃபி புள்ள’ - பத்திரமாக மீட்கப்பட்டது எப்படி?
Published on
Updated on
1 min read

மராட்டிய மாநிலம் சதாரா மாவட்டம் போர்ன் காட் பகுதியில் அமைந்துள்ளது தோஸ்கர் நீர்வீழ்ச்சி.. புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான இந்த பகுதிக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நாளொன்றுக்கு ஏராளமானோர் வந்து செல்வதுண்டு.

இந்நிலையில் புனே பகுதியைச் சேர்ந்த நஸ்ரின் அமீர் குரேஷி என்ற இளம்பெண் தனது நண்பர்கள் 7 பேருடன் கடந்த ஜூலை 16-ம் தேதி சென்றுள்ளார்.

முதலில் தோஸ்கர் அருவியை காண்பதற்காகத்தான் அனைவரும் ஆவலுடன் கிளம்பினார். ஆனால் பயங்கர காற்றுடன் கூடிய மழை பெய்ததால் அருவிக்கு செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து நஸ்ரின் அமீர் குரேஷி, நண்பர்களை அழைத்துக் கொண்டு போர்ன் காட் பகுதிக்கு சென்றனர். அங்கு அனைவரும் ஆனந்தத்தில் துள்ளி குதித்ததுடன், செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

அப்போது மலையின் சரிவுப் பகுதிக்கு சென்ற நஸ்ரின், திடீரென கால் இடறி கீழே விழுந்தார். சுமார் 100 அடிக்கும் அதிகமான ஆழ பள்ளத்தில் விழுந்தது குறித்து நஸ்ரினின் நண்பர்கள் செல்போன் மூலம் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

DD2

பின்னர் அவர்கள் அளித்த தகவலின்பேரில் விரைந்து சென்ற ஊர்க்காவல்படையினர் மற்றும் மலையேறும் வீரர்கள் இளம்பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பள்ளத்தில் விழுந்த நஸ்ரின் மரக்கிளை ஒன்றை பிடித்து தொங்கியதால், அவரை மீட்பதில் சிரமம் எதுவும் ஏற்படவில்லை. ஊர்க்காவல் படையினர் கயிறை மெல்ல கீழே போட்டதைத் தொடர்ந்து, லாவகமாக பிடித்துக் கொண்ட நஸ்ரின் பத்திரமாக மீட்கப்பட்டார்.

கனமழையின் காரணமாக சதாரா பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்கள் ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த தடையை மீறி ஏராளமானோர் சென்று வந்த நிலையில், இப்படியொரு அசம்பாவித சம்பவம் அரங்கேறியுள்ளது.

இன்றைக்கு மக்கள் எங்கு சென்றாலும் செல்ஃபி எடுத்து அதனை சமூகவலைதளங்களில் பதிவிட்டு லைக்குகளை அள்ளுவதற்கு ஆவல் கொள்கின்றனர். ஆனால் வீண் ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டு ஆபத்தையே விலை கொடுத்து வாங்குவது ஏனோ?

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com