தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சென்னை ஊரப்பாக்கத்தில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
சமீபத்தில் சொந்த ஊருக்கு சென்று மீண்டும் சென்னை திரும்பியவர், தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மாநகர பேருந்தில் ஏறினார்.
TN 01 AN 4025 என்ற எண் கொண்ட அரசுப் பேருந்தில் ஏறியவர், ஊரப்பாக்கம் செல்ல வேண்டும் எனக் கூறி நடத்துனரிடம் 200 ரூபாய் நோட்டை நீட்டியிருக்கிறார். அதற்கு நடத்துநர், சில்லறை இல்லை எனக் கூறி டிக்கெட் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.
நீண்ட நேரமாக டிக்கெட் இன்றி பயணித்த இளைஞர், மீண்டும் நடத்துநரிடம் சென்று முறையிட்டார். வரும் வழியில் டிக்கெட் பரிசோதகர் வந்தால் தனக்கு தான் ஆபத்து, ஆகவே, டிக்கெட் கொடுங்கள் என இளைஞர் கேட்கவே, சில்லறை இல்லாமல் ஏன் பேருந்தில் ஏறுகிறீர்கள் என நடத்துநர் கூறியதாக தெரிகிறது.
இதற்கு இளைஞர், உங்கள் பெயர் என்ன என கேட்டதற்கு கோபமடைந்த நடத்துநர், ஆபாசமான வார்த்தைகளால் திட்டி அடிக்கவும் பாய்ந்தார். இதைப் பார்த்த சகப் பயணிகள், நடத்துநரை கண்டித்தனர்.
நடந்த காட்சிகளை செல்போனில் வீடியோ எடுத்த இளைஞர் அதனை சமூகவலைதளங்களில் பதிவிட்டார். பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் செல்வது சட்டவிரோதம்தான் என்றாலும், நடத்துநரே பயணிக்கு டிக்கெட் வழங்காமல் இழுத்தடித்ததும், ஏன் என கேட்டதற்கு இழுத்துப் போட்டு அடித்ததும் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.