சுதந்திர தினம் முடிந்தது!! தேசிய கொடியை எப்படி அப்புறப்படுத்துவது?

சுதந்திர தினம் முடிந்த நிலையில், தேசிய கொடியை அப்புறப்படுத்துவது எப்படி என்று பார்க்கலாமா?
சுதந்திர தினம் முடிந்தது!! தேசிய கொடியை எப்படி அப்புறப்படுத்துவது?

சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்ததையடுத்து, நேற்று பவள விழாவை இந்தியா முழுவதும் கொண்டாடியது. இந்தியாவின் 75வது சுதந்திர ஆண்டை கோலாகலமாகக் கொண்டாட, மத்திய அரசு மக்களுக்கு ஒரு சில கோரிக்கைகளை விடுத்தது. அதில் மிக முக்கியமான ஒன்று அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி பறக்க விட வேண்டும் என்பது தான். ‘ஹர் கர் திரங்கா’ என்ற பிரச்சாரத்திற்காக, சட்ட அமைப்பே மாற்றப்பட்ட நிலையில், சாதாரண குடிமக்கள் வரை அனைவருக்கும் தேசிய கொடியின் அருமையும் பெருமையும் போய் சேர வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் இந்த பிரச்சாரம் கொண்டுவரப்பட்டது. மேலும், தேசிய கொடியுடன் செல்ஃபீ எடுத்து பதிவிடவும், அரசு கொரிக்கை விடுத்தது.

இதனைத் தொடர்ந்து பல விதிமுறைகள் தேசிய கொடிக்கான மரியாதையைக் காப்பாற்றும் விதமாகக் கொண்டுவரப்பட்டன. இந்தியா என்ற நாட்டை, உலகிற்கு எடுத்துக் காட்டும் ஒரு அடையாளமாக இருக்கும் தேசிய கொடிக்கான மரியாதை அந்த கொடியை பறக்க விடுவதில் மட்டுமல்ல, அதனை கையாளும் விதத்திலும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதற்கான வழிமுறைகள், பொது மக்களுக்கு மத்தியில் அவ்வளவாக பரிட்சயம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் 75 ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும் வகையில், ஆசாதி கா மகோத்சவ் என்பது கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. 15 ஆகஸ்ட் கொண்டாடப்படும் சுதந்திர தினத்தை முன்னிட்டு, மத்திய அரசு, தேசிய கொடியை பராமரிக்கும் விதிமுறைகளை, ‘ஹர் கர் திரங்கா’ பிரச்சாரத்துடன் சேர்த்து வெளியிட்டது.

அப்படி ஏற்றிய கொடியை எப்படி மடித்து பராமரிப்பது என்பதைப் பார்க்கலாம்!

 • தேசிய கொடியை முதலில் சமமான இடத்தில் வைக்க வேண்டும். மேல் புறம் ஆரஞ்சு நிறமும், கீழே பச்சை நிறமும் படர்ந்த படியாக வைக்க வேண்டும்.
 • ஆரஞ்சு நிறப் பக்கத்தை முதலில் வெள்ளைப் பட்டைக்குக் கீழே வைத்து மடிக்க வேண்டும். பின், பச்சை நிற பட்டை அதற்கும் கீழே வைத்து மடிக்க வேண்டும்.
 • பின், கொடியை, அசோக சக்கரம் தெரியும் விதத்தில், ஐந்தடுக்காக மடிக்க வேண்டும்.
 • அதன்பிறகு, உள்ளங்கையில் இருந்து கை முட்டி வரை மட்டுமே பாதுகாப்பாக ஒரு இடத்தில் வைக்க வேண்டும்.

ஒரு வேளை அப்புறப்படுத்த வெண்டுமென்றால் எப்படி என பார்க்கலாம்!

இந்திய தேசியக் கொடி சட்டம், தேசிய கொடியை அப்புறப்படுத்தவும் ஒரு சில கட்டமைப்புகளைக் கொடுத்துள்ளது. சில கொடிகள் கிழிந்தோ, பழையனவாகி உபயோகத்திற்கு தகுதியற்றதாகவும் மாறி இருக்க வாய்ப்பு இருக்கும். அவற்றை வெளியே தூக்கி எரியவோ, தரையில் போடவோ சட்டத்தில் அனுமதி இல்லை. அப்படி எதாவது கொடியை அப்புறப்படுத்த வேண்டும் என்றால், அதனை எரிக்க அல்லது புதைக்க வேண்டும்.

கொடியை எரிக்கும் முறை:

ஒரு மனிதருக்கு எவ்வளவு மரியதை கொடுக்கிறோமோ, அதே போல தான் தேசிய கொடிக்கும் மரியாதை கொடுக்க வேண்டும்.

 • சுத்தமான இடத்தில் வைத்து, தீமூட்ட வேண்டும்.
 • நெருப்பின் மேல் கொடியை தூக்கி எரிய கூடாது
 • பொருமையாக தீ மேல் வைத்து மௌன அஞ்சலி செலுத்த வேண்டும்.
 • கொடி முழுமையாக எரிந்து சாம்பலாகும் வரை காத்திருக்க வேண்டும். கொடி அரை குறையாக எரிந்திருக்கக் கூடாது.
 • பின், தீயணைக்க தேவையான முறைகளை பயன்படுத்தி அந்த நெருப்பை அணைக்கலாம்.

அப்படி எரிக்க முடியாவிட்டால், கொடியை புதைக்கலாம்.

கொடியை புதைக்கும் முறை:

சுத்தமான அழகான ஒரு இடத்தில் தான் தேசிய கொடியை புதைக்க வேண்டும்.

 • முதலில், கொடியை மூன்று வண்ணங்களாக கத்திரிக்கோலை வைத்து பிரித்து கொள்ள வேண்டும். 
 • கட்டுப்பாடுகளுக்கு ஏற்றது போல, பிரித்த தேசிய கொடியை மடித்து, மட்கும் டப்பாவில் வைத்து உள்ளே புதைக்க வேண்டும்.
 • புதைத்த பின், குறைந்தது இரண்டு நிமிடங்கள், நேராக நின்று மௌன அஞ்சலி செலுத்த வேண்டும்.

எரிக்கவோ, புதைக்கவோ முடியாதவர்கள், இந்தியெ தேசிய கொடியை மறுசுழற்சி செய்யலாம்.

மறுசுழற்சி முறை:

தற்போது வரும் கொடிகளில் சில, மட்காத சிந்தடிக் கொடிகளாக இருப்பதால், புதைப்பதும் எரிப்பதும் மாசு உருவாக்க வாய்ப்புகள் உள்ளன. ஆகையால், அவற்றை, மறுசுழற்சி செய்யும் அமைப்புகளுக்கு தானமளித்தோ, அல்லது நாமாகவே மறுசுழற்சி செய்தோ பயன்படுத்திக் கொள்ளலாம்.

தேசிய கொடி என்பது வெறும் துணி மட்டுமல்ல. அது, நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கும் சுதந்திரத்தைப் பெறுவதற்கு ரத்தம் சிந்தி உயிரை ஈந்த பல போராளிகளுக்கும், இன்றும், நமது எல்லைகளில் மழையிலும், பனியிலும், வெயிலிலும் போராடிக் கொண்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு கொடுக்கும் மரியாதை நிமித்தமும் ஆகிறது நம் கொடி.

அதனை நம் உயிரினும் மேலாக மதித்து, பாதுகாக்க வேண்டும் என்பது சட்டம் என்பதைத் தாண்டி, நமது அடிப்படைக் கடமையாக்கி செயல்பட வேண்டும்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com