’தமிழ்நாடு வளர்ச்சியடைந்தால் இந்தியா வளர்ச்சியடையும்’ - பிரதமர் நரேந்திர மோடி

’தமிழ்நாடு வளர்ச்சியடைந்தால் இந்தியா வளர்ச்சியடையும்’ - பிரதமர் நரேந்திர மோடி
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு வளர்ச்சியடைந்தால் இந்தியா வளர்ச்சியடையும் என பிரதமர் மோடி சென்னை பல்லாவரத்தில் தெரிவித்துள்ளார். 

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, விமான நிலைய புதிய ஒருங்கிணைந்த முனையம், சென்னை - கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிய பின்னர், விவேகானந்தர் இல்லம் சென்ற பிரதமர், அடுத்ததாக அரசு நிகழ்ச்சி நடக்கும் பல்லாவரம் கிரிக்கெட் மைதானத்துக்கு சென்றடைந்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எல்.முருகன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர்.  

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு நெடுஞ்சாலை, ரெயில்வே தொடர்பான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் வணக்கம் தமிழ்நாடு எனக்கூறி உரையைத் தொடங்கிய அவர், மின் வர்த்தக பரிமாற்றத்தில் உலகளவில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக தெரிவித்தார். நாட்டின் கட்டமைப்பை வலுப்படுத்த 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 2014 ஆம் ஆண்டை விட இது 5 மடங்கு அதிகம் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில், தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளின் தூரம் 800 கிலோ மீட்டரிலிருந்து 2 ஆயிரம் கிலோ மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். முந்தைய ஆட்சியை விட, நெடுஞ்சாலை கட்டமைப்புகளுக்கு தற்போதைய ஆட்சி அதிக நிதியை செலவிட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், பணி கலாச்சாரம் மற்றும் தொலைநோக்கு பார்வையே நாட்டின் வெற்றி எனவும் கூறினார். சென்னை - கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை, சிறுகுறு தொழில்களுடன் மக்களை நெருக்கமாக இணைப்பதாகவும், தமிழ்நாடு ஜவுளித்துறையில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது எனவும், சென்னை, கோவை, மதுரை இன்றைய திட்டங்களால் நேரடியாக பயனடைந்துள்ளதாகவும் கூறினார். வ.உ.சிதம்பரனாரின் சொந்த மண்ணில் இருந்து வந்தே பாரத் ரயில் தயாரிப்பது பெருமையளிக்கிறது எனக்கூறிய அவர், ஜவுளி உற்பத்தி மையங்களாக விளங்கும் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களை வந்தே பாரத் ரயில் சேவை இணைப்பதாகவும் கூறினார்.

மேலும் இந்தியாவின் வளர்ச்சி என்ஜின்களில் தமிழ்நாடும் ஒன்று எனக்கூறிய அவர், தமிழ்நாடு வளர்ச்சியடைந்தால் இந்தியா வளர்ச்சியடையும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com