ஆர்.எஸ்.எஸ் பேரணி...வலுவற்ற வாதத்தை வைத்த அரசு...ஏன் இந்த இரட்டை வேடம்? கேள்வி எழுப்பிய சீமான்!

ஆர்.எஸ்.எஸ் பேரணி...வலுவற்ற வாதத்தை வைத்த அரசு...ஏன் இந்த இரட்டை வேடம்? கேள்வி எழுப்பிய சீமான்!
Published on
Updated on
2 min read

தமிழக அரசு பேரணிக்கு அளித்த தடையை நீதிமன்றம் நீக்கினால் அதனால் விளையக்கூடிய விரும்பத்தகாத செயல்களுக்கு யார் பொறுப்பேற்பது? என சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு உத்தரவு:

காந்தி ஜெயந்தியன்று தமிழகம் முழுவதும் 51 இடங்களில் பேரணி நடத்த அனுமதி கேட்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் தமிழக காவல்துறையிடம் முறையிடப்பட்டது. தமிழக காவல்துறை அனுமதியளிக்காத நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அக்டோபர் 2ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டது.

சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும்:

இதனிடையே, பிஎஃப்ஐ அமைப்பின் தடையை தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்ற களேபரங்கள், மற்றும் விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் போட்டி பேரணி அறிவிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அக்டோபர் 2ம் தேதி பேரணி நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

நவம்பர் 6 ஆம் தேதி பேரணிக்கு அனுமதி:

இந்நிலையில் அக்டோபர் 2ம் தேதிக்கு பதிலாக நவம்பர் 6ம் தேதி பேரணியை நடத்திக் கொள்ள ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் நவம்பர் 6தேதி பேரணி நடத்த அனுமதி வழங்குமாறும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறும் காவல்துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கேள்வி எழுப்பிய சீமான்:

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கேள்வி எழுப்பும் விதமாக அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசு, சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி பேரணிக்கு அளித்த தடையை நீதிமன்றம் நீக்கினால் அதனால் விளையக்கூடிய விரும்பத்தகாத செயல்களுக்கு யார் பொறுப்பேற்பது? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தமிழகத்தின் பெருவாரியானக் கட்சிகளும், பொதுமக்களும் ஒருமித்து எதிர்ப்புத் தெரிவித்திருப்பது தமிழகத்தில் நிலவி வரும் மதநல்லிணக்கமும், சகோதரத்துவ மனப்பான்மையும் சிதைந்துவிடக்கூடாது என்கிற பொது நோக்கத்திற்காகத்தான்! அவ்வுணர்வின் பிரதிபலிப்பாகவே, தமிழக அரசும், அனுமதி வழங்காது பேரணிக்குத் தடைவிதித்தது. மாநிலத்தின் நலன் கருதி, மக்களின் பாதுகாப்பை மனதிற்கொண்டு எடுக்கப்பட்ட இம்முடிவுக்கு எதிராக உயர்நீதிமன்றம் கொடுத்திருக்கும் இத்தீர்ப்பு பல்வேறு கேள்விகளுக்கு வித்திடுவதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

எதற்கு இந்த குழப்பவாதம்? இரட்டைவேடம்?:

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கக்கூடாது என தமிழகத்தில் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், இதுவரை எந்த அரசும் அனுமதி வழங்காத இந்த பேரணிக்கு, தற்பொழுது ஆளும் திமுக அரசு நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நோக்கத்தை எடுத்துக் கூறாது, பாப்புலர் ஃரண்ட் ஆப் இந்தியா மீதான தடையை ஒரு காரணமாகக் கூறுவது வலுவற்ற வாதமில்லையா? காந்தி ஜெயந்தி மட்டுமல்லாது எந்த நாளில் பேரணி நடத்தினாலும் தமிழகத்தின் அமைதி குலையுமென வாதிட வேண்டிய தமிழக அரசு, மற்ற நாட்களில் நடத்துவது சிக்கலில்லை என உயர்நீதிமன்றத்தில் கூறியிருப்பது மோசடித்தனமில்லையா? எதற்கு இந்தக் குழப்பவாதம்? இரட்டைவேடம்? என திமுக அரசிடம் கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து, இவ்விவகாரத்தில் தமிழக அரசு சீரியக் கவனமெடுத்து, உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஆர்.எஸ்.எஸ்.ஸின் பேரணிக்காக தடையை சட்டப்படி உறுதிசெய்ய வேண்டுமென சீமான் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com