“எனக்கு உட்கார சேர் போடு: மாவட்ட செயலாளரை கூட்டி வந்தால்...” இராமநாதபுரத்தில் தொடரும் உட்கட்சி பூசல்!

“எனக்கு உட்கார சேர் போடு: மாவட்ட செயலாளரை கூட்டி வந்தால்...” இராமநாதபுரத்தில் தொடரும் உட்கட்சி பூசல்!
Published on
Updated on
1 min read

இராமநாதபுரத்தில் திமுக பொறுப்பு அமைச்சர் இராஜகண்ணப்பன், சட்டமன்ற ஊறுப்பினரும், மாவட்ட செயலாளருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் என இரு பிரிவுகளாக செயல்பட்டு வரும் நிலையில், மாவட்ட செயலாளர் பெயரைச் சொல்லி தொழிற்சங்க நிர்வாகி மிரட்டுவது திமுகவின் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இராமநாதபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக புறநகர் கிளை வளாகத்தில், திமுக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் கிளை தலைவரும், பொருளாளர் நாகராஜனும் இணைந்து மண்டல மேலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அங்கு வந்த திமுக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் கிளைச் செயலாளர் செல்வகுமார், எனது அனுமதி இல்லாமல் எப்படி இவர்கள்  உள்ளே வந்தார்கள் என மண்டல மேலாளர் பத்மகுமாரை மிரட்டியுள்ளார். மேலும் ”எனக்கு உக்கார  சேர் வேண்டும்; நீங்கள் எழுந்து போங்கள்” என  மண்டல மேலாளரை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். தொடர்ந்து, ”மாவட்ட செயலாளர் கூட்டி வரவா,  வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா” என மிரட்டும் பாணியில் பேசியுள்ளார். 

இதனிடையே இச்சம்பவத்தையெல்லாம் வீடியோவாக தனது செல்போனில் படம் பிடித்த தொழிற்சங்க நிர்வாகி ஒருவர், சமூக வலைதளங்களில் பதிவிடவே, தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

ஏற்கனவே, ராமநாதபுரம் மாவட்டத்தில் உச்சக்கட்ட உட்கட்சி பூசலில் திமுக இருந்து வரும் நிலையில், தற்போது மாவட்ட செயலாளர் பெயரை சொல்லி திமுக தொழிற்சங்க நிர்வாகி அடாவடி செய்யும் வீடியோ வெளியாகி திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் போக்குவரத்து கழக பணிமனை தரப்பில், அரசு மண்டல மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை மிரட்டிய சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், இச்சம்பவம் தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்...

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com