அணில் பற்றிய நீங்கள் அறிந்திராத உண்மைகள்

அணில் பற்றிய நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யமான உண்மைகள்
அணில் பற்றிய நீங்கள் அறிந்திராத உண்மைகள்
Published on
Updated on
1 min read
 அணில் மரத்தில் வசிக்கக்கூடிய ஒரு கொறித்துண்ணி வகையாகும்.
40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே அணில்கள் வாழ்ந்துள்ளன என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட அணில்கள் அதன்பிறகு ஆஸ்திரேலியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவிலுள்ள அணில்கள் இந்தியன் பார்ம்ஸ் ஸ்கொரில்ஸ்(Indian palm squirrel)என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள அணில்களுக்கு முதுகில் மூன்று கோடுகள் இருக்கும். ஐந்து கோடுகள் உள்ள அணில்கள் வட இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
அணிலுக்கு 4 முன்பற்கள் இருக்கும். இந்த முன்பற்கள் மிக நீளமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் கூர்மையாகவும் தொடர்ந்து வளரக்கூடிய தன்மை கொண்டது. இது ஆண்டுக்கு ஆறு அங்குல அளவில் வளரும். இதனால்தான் அணில்கள் மரப்பட்டை, கொட்டைகளை மற்றும் கையில் கிடைத்தவற்றை தொடர்ந்து கொறித்துக் கொண்டே இருக்கும். இப்படி அணில்கள் கொறிக்காவிட்டால் பற்கள் தொடர்ந்து நீளமாக வளர்ந்துவிடும். அப்படி நீளமாக வளர்ந்து விட்டால் அதன் வாயை அசைக்க முடியாது. ஆகையால் தான் எப்பொழுது பார்த்தாலும் அணில்கள் கொறித்து கொண்டே இருக்கிறது.
ஒரு ஆண் அணில் பெண் அணிலை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தாலும் அதன் மணத்தை வைத்து கண்டுபிடித்து விடுமாம். அணில்கள் இனப்பெருக்க காலம் பிப்ரவரி முதல் மே மாதம் வரை. கர்ப்பகாலம் மொத்தம் 44 நாட்கள். பொதுவாக ஒரு கர்ப்பத்தில் 2 முதல் 4 குட்டிகள் வரை ஈனும். புதிதாக பிறந்த அணில் குட்டி ஒரு இன்ச் நீளம் மட்டுமே இருக்கும். அணிலால் உடல் நீளத்தைப் போல 10 மடங்கு தூரத்திற்கு குதிக்க முடியும்.  அணில்கள் சராசரியாக வாரத்திற்கு 680 கிராம் உணவை சாப்பிடும்.
அணில்கள் பொதுவாக மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை. அணில் இனங்களில் மிகச்சிறியது ஆப்பிரிக்க பிக்மி அணில் ஆகும். இது சுமார் 10 சென்டிமீட்டர் நீளம் கொண்டது.
மிகப்பெரிய அணில் இந்திய ராட்சத அணில் (Indian giant squirrel ) ஆகும். இது 3 அடி நீளம் வரை வளரும். உலகம் முழுவதும் மொத்தம் 275 வகையான அணில்கள் உள்ளன. பறக்கும் அணில்கள் மட்டுமே 44 வகை இருக்கிறது. 
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com