அனைத்து சலுகைகளும் பெற ஆதார் எண் இருக்கும் போது மக்கள் ஐடி திட்டம் தேவையா...? விஜயகாந்த் கேள்வி!

அனைத்து சலுகைகளும் பெற ஆதார் எண் இருக்கும் போது மக்கள் ஐடி திட்டம் தேவையா...? விஜயகாந்த் கேள்வி!
Published on
Updated on
2 min read

அனைத்து சலுகைகளும் பெற ஆதார் எண் இருக்கும் போது மக்கள் ஐடி திட்டம் தேவையா? என்று கேள்வி எழுப்பி தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மக்கள் ஐடி திட்டம்:

மக்களின் தரவுகளை ஒன்றிணைக்கும் ஒரு திட்டம் தான் இந்த மக்கள் ஐடி. இதன்மூலம் ஒரு நபரின் முழு தரவுகளையும் ஒன்றிணைத்து, அவருக்கு அரசின் திட்டங்கள் சரியாக சென்றடைகிறதா? அப்படி செல்லவில்லையென்றால் அதை எளிமையாக இந்த மக்கள் அடி மூலம் கண்டுபிடித்து நிறைவேற்றப்படும். இந்த திட்டத்திற்குள் அரசின் 30 க்கும் மேற்பட்ட துறைகளும் வந்துவிடுவதால் ஒருவருக்கு சென்றடையும் அரசு திட்டம் குறித்த தரவுகள் எளிமையாக கண்டுபிடிக்கப்படும் என்பதால் தமிழக அரசு இந்த மக்கள் ஐடி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி டெண்டருக்கு விடுத்துள்ளது.

மக்கள் ஐடி மூலம் அனைத்து சேவையும் செயல்படும்:

இந்நிலையில் தமிழக அரசு அறிமுகப்படுத்தி அதை செயல்படுத்துவதற்காக டெண்டருக்கு விடுக்கப்பட்டுள்ள மக்கள் ஐடி திட்டம் குறித்து தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக அரசு மாநிலத்தில் வசிக்கும் மக்களுக்கு, மக்கள் ஐடி என்ற தனித்துவ அடையாள எண்ணை வழங்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தமிழக அரசின் மின் ஆளுமை முகமையின் சமீபத்திய டெண்டர் அறிவிப்பின்படி, குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் மக்கள் ஐடி என்ற பெயரில் 12 இலக்க எண் வழங்கப்படவிருப்பதும், அனைத்து சேவைகளையும் இதன் மூலம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

மக்கள் ஐடி திட்டம் எதற்கு?:

மேலும் மக்கள் ஐடி மாநிலத்தில் உள்ள பல்வேறு துறைகளுக்கு இடையிலான தொடர்புக்கு மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தத் திட்டத்தில் வெளிப்படை தன்மை இல்லாத நிலை உருவாகியுள்ளது. இந்தத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டாலும், ஏற்கனவே அனைத்து சலுகைகளுக்கும் ஆதார் எண் பயன்படுத்தி வரும் நிலையில், மக்கள் ஐடி திட்டம் எதற்கு என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

நாட்டில் குழப்பம் ஏற்படாதா?:

இப்படி ஒவ்வொரு மாநிலமும் தனி அடையாள எண் வழங்க முன்வந்தால், நாட்டில் குழப்பம் ஏற்படாதா? எனவே, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு தமிழக மக்களிடம் அரசு கருத்து கேட்க வேண்டும். அதேசமயம் தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களின் வருகையை வரைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வசிக்கும் வெளி மாநில தொழிலாளர்களை கணக்கெடுப்பு நடத்திய பிறகு, மக்கள் ஐடி போன்ற திட்டங்களை வெளிப்படைத் தன்மையோடு தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com