ஒரு காலத்தில் பூமியை போல் செழிப்பாக இருந்த செவ்வாய் கிரகம்: விலகும் சிவப்பு கிரகத்தில் மர்மங்கள்...

செவ்வாய் கிரகத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட பாறைத்துகள்களில் அங்கு உயிர்கள் வாழ்ந்திருக்கலாம் என நாசா தெரிவித்துள்ளது.
ஒரு காலத்தில் பூமியை போல் செழிப்பாக இருந்த செவ்வாய் கிரகம்: விலகும் சிவப்பு கிரகத்தில் மர்மங்கள்...
Published on
Updated on
2 min read

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா செவ்வாய் கிரகத்திற்கு பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை  கடந்த ஆண்டு அனுப்பியது. கடந்த பிப்ரவரி மாதம் பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தின் ஜெசெரோ க்ரேடர்  என்ற இடத்தில் தரையிறங்கியது. அப்பகுதியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஏரி இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகளால் நம்பப்பட்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தன.

பெர்சவரன்ஸ் கருவி செவ்வாயின் புகைப்படங்களை தொடர்ந்து பூமிக்கு அனுப்பி வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பாறைத்துகள்களை சேகரிக்கும் பணியில் ரோவர் ஈடுபட்டது. ஆனால் முதல் முயற்சியே தோல்வியில் முடிவடைந்ததால் நாசா விஞ்ஞானிகள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் தொடர் முயற்சியின் பயனாக 6 சக்கரங்களை கொண்ட பெர்சவரன்ஸ் ரோவர் கருவி பாறைகளை குடைந்து மாதிரிகளை வெற்றிகரமாக சேகரித்துள்ளது. விரல் அளவுக்கு தடிமனான பாறை துகள்களை டைட்டானியம் குழாய்க்கு ரோவர் சேமித்து வைத்துள்ளது.சேகரிக்கப்பட்ட மாதிரிக்கு நாசா பெயரிட்டு ஆய்வுகளை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக நாசா வெளியிட்டுள்ள படங்கள் சர்வதேச விண்வெளி ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. 

செவ்வாயில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் அமெரிக்காவில் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. பாறை மாதிகள் மூலம் கிடைத்துள்ள முதல்கட்ட தகவலில் செவ்வாயில் எரிமலை செயல்பாடுகள் நீர் ஆதாரம் இருந்ததற்கான தடையங்கள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 2 மாதிரிகள் கிடைத்துள்ள நிலையில் பெர்சவரன்ஸ் கருவி அங்கிருந்து 650 அடி தூரம் நகர்ந்து பாறை மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த நிலத்தடி நீர் ஒரு காலத்தில் ஜெசெரோவில் இருந்த ஏரியுடன் தொடர்புடையதாக இருக்கலாம் அல்லது ஏரி வற்றிப்போன பிறகு அது பாறைகள் வழியாக பயணம் செய்திருக்கலாம் என்றும் இந்த பாறைகளை மாற்றிய நீர் மில்லியன் கணக்கான ஆண்டுகளாக இருந்ததா என்று விஞ்ஞானிகளால் இன்னும் சொல்ல முடியவில்லை என்றாலும், அந்த பகுதியில் நுண்ணிய வாழ்க்கைக்கு அதிக வரவேற்பு அளிக்கும் வகையில் அது நீண்ட காலம் இருந்தது என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com