பால்குடம் எடுக்கும் மியா கலிஃபா... வாண்டுகள் வைத்த விவகாரமான பேனர்...

காஞ்சிபுரத்தில் அம்மன் கோயில் திருவிழாவுக்காக வைக்கப்பட்ட பேனரில் ஆபாசப் பட நடிகை மியா கலிஃபாவின் புகைப்படம் இடம் பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வாண்டுகளின் விபரீதமான செயல்கள் குறித்து பார்க்கலாம்..
பால்குடம் எடுக்கும் மியா கலிஃபா...  வாண்டுகள் வைத்த விவகாரமான பேனர்...
Published on
Updated on
2 min read

ஆடி மாதம் என்றாலேயே அம்மன் கோயில்கள் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். அம்மனுக்கு சிறப்பு வாய்ந்த ஆடி மாதத்தில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவதோடு, கூழ் வார்த்தல், அன்னதானம் போன்றவற்றை நடத்துவர்.

கிராமங்கள், நகரங்கள் என அனைத்து பகுதிகளிலும் ஆடி மாதத்தை பயபக்தியுடன் கோலாகலமாக கொண்டாடி வருவார்கள் மக்கள். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் ஆடி மாதத் திருவிழாவுக்கு வைக்கப்பட்ட பேனரில் ஆபாசப் பட நடிகையின் புகைப்படம் இடம் பெற்றிருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலைப் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீமாப்பிள்ளை விநாயகர் கோயில் வளாகத்தில் நாகாத்தம்மன் மற்றும் செல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலில் ஆடி மாதம் தோறும் திருவிழா எடுத்து வருவது வழக்கம். அந்த வகையில் ஆகஸ்ட் 9-ம் தேதியன்று ஆடி வெள்ளியை முன்னிட்டு கோயிலில் வளைகாப்பு வைபோக விழா நடைபெறுகிறது.

இதற்காக அப்பகுதி மக்கள் திருவிழா ஏற்பாட்டை விழாக்குழுவினர் விறுவிறுப்பாக மேற்கொண்டனர். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த 19 வயதுக்கும் குறைவான வாண்டுகள் பேனர் ஒன்றை வைத்தனர்.

நடுவில் அம்மன் சிலை, வலது புறம் மற்றொரு சிலை இடம் பெற்றிருக்க, இடது புறத்தில் பிரபல ஆபாசப் பட நடிகை மியா கலீஃபா பால் குடம் எடுப்பது போல ஓர் புகைப்படம் வைக்கப்பட்டது.

இந்த விவகாரமான பேனரை வைத்தவர்கள் அனைவருமே 17 மற்றும் 18 வயது மதிப்புள்ள வாண்டுகள் என்பது தெரியவந்தது. ஒவ்வொருவரும் தங்கள் புகைப்படம், செல்போன் எண் இடம் பெற்றிருக்க, ஆதாரம் என்பதற்கு எங்க பாசம் ஊரே பேசும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பேனரால் சர்ச்சை கிளம்பிய நிலையில் போலீசார் நேரில் சென்று உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து இளைஞர்கள் பேனரை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தாங்கள் வைத்த பேனரால் சர்ச்சை கிளம்பியதையே உணராத அந்த குட்டி அஞ்சான்கள் இந்தியா ட்ரெண்டிங்கே நாங்கதான் ராஜா என காலரை தூக்கி விட்டு பெருமைப்பட்டுக் கொண்டனர்.

கோயில் திருவிழாக்களில் சினிமா நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள் படம் இடம் பெற்று வந்த நிலையில் ஆபாசப் பட நடிகையின் புகைப்படத்தை வைக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடே குருவிமலை இளைஞர்களைப் பற்றி பேசத் துவங்கியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com